ஜாஹீர் கான் மாதிரி இந்திய அணியில் கம்பேக் கொடுப்பேன் – கவுன்டியில் கலக்கும் நட்சத்திர இந்திய வீரர் நம்பிக்கை

Umesh
- Advertisement -

இந்தியா போன்ற மிகப்பெரிய போட்டி நிறைந்த கிரிக்கெட் அணியில் ஒரு போட்டியில் சதமடித்து காயத்தால் வெளியேறும் வீரருக்கே அதிலிருந்து குணமடைந்து திரும்பும்போது இடம் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட நிலையில் பார்மை இழந்து சுமாராக பந்துவீசுவதால் வாய்ப்பை இழக்கும் பவுலர்கள் உள்ளூர் கிரிக்கெட் அல்லது ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதே கம்பேக் கொடுப்பதற்கான வழியாகும். அந்த இரண்டிலுமே வெற்றியை காண முடியாத நட்சத்திர இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் ராயல் லண்டன் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுக்க போராடி வருகிறார்.

ஒரு கட்டத்தில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சீனியர் பேட்ஸ்மேன் புஜாரா இந்த கவுண்டி தொடரில் ரன்மழை பொழிந்து மீண்டும் கம்பேக் கொடுத்த பாதையை பின்பற்றத் துவங்கியுள்ள இவர் நடைபெற்று வரும் ராயல் லண்டன் கோப்பை தொடரில் மிடில்சக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் புஜாரா அதிரடியாக விளையாடும் அளவுக்கு பிளாட்டாக இருக்கும் பிட்ச்களில் இதுவரை பங்கேற்ற 5 லீக் போட்டிகளில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 15 விக்கெட்டுகளை எடுத்து அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு உதவியுள்ளார்.

- Advertisement -

கம்பேக் போராட்டம்:
மேலும் ராயல் லண்டன் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை 7.06 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து அசத்தலாக செயல்பட்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த 2010இல் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று படிப்படியாக முன்னேறி முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பையில் அசத்தலாக செயல்பட்டு அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்தார். ஆனால் அதன்பின் பார்மை இழந்து சுமாராக செயல்படத் துவங்கிய அவர் ஐபிஎல் தொடரிலும் ரன்களை வாரி வழங்கியதால் 2018க்குப்பின் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இருப்பினும் இப்போதும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து வரும் அவர் பும்ரா, ஷமி, சிராஜ் போன்றவர்கள் இருப்பதால் விளையாடும் 11 பேர் அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

ஜஹீர் மாதிரி:
இந்நிலையில் முன்னாள் இந்திய ஜாம்பவான் ஜாஹீர் கான் இதேபோல் 2006இல் தடுமாறியபோது கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அசத்தலாக செயல்பட்டு கம்பேக் கொடுத்ததைப் போல் தாமும் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவேன் என்று உமேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்குள்ள பிளாட்டான பிட்ச்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எளிமையாக இல்லை. அனைத்துப் போட்டிகளிலும் 300+ ரன்களை அடிப்பதிலேயே நீங்கள் அதை பார்க்க முடியும். இருப்பினும் புதிய பந்திலும் கடைசி கட்ட ஓவர்களில் பழைய பந்திலும் நான் விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்து வருகிறேன்”

“யார்கர் பந்துகளே எனது இலக்காக உள்ளது. மேலும் வரும் நாட்களில் இதே போல் மிகச் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் என்னுடைய அடிப்படைச் செயல்பாடுகள் உயர்ந்து இந்தியாவுக்காக மீண்டும் விளையாட முடியும் என்பதே என்னுடைய எண்ணங்களாக உள்ளது. ஏனெனில் அது போன்ற சிறந்த செயல்பாடுகளை நாட்டுக்காக வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த கவுண்டி அணியில் விளையாடுவது எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுக்கிறது”

- Advertisement -

“இந்த அணியில் முதன்மை பந்துவீச்சாளர் இல்லாதபோது அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதனால் பொறுப்புடன் அழுத்தத்தில் பந்து வீசுவது வித்தியாசமானது. இருப்பினும் அழுத்தத்திலும் மகிழ்ச்சியுடன் எனது சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கிறேன். அதனால் நாங்கள் 5 போட்டிகளில் 4 வென்றுள்ளோம். மேலும் ஜஹீர் கான் கேரியர் இந்த கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிய பின் (2006இல் ஓர்செஸ்ஸ்டர்ஷைர் அணிக்காக) முற்றிலுமாக மாறியது என்பதையும் நான் அறிவேன்”

இதையும் படிங்க : ஏபிடி அளவுக்கெல்லாம் கிடையாது, சூரியகுமாரை பாராட்டிய ஆஸி ஜாம்பவானுக்கு பாக் வீரர் பதிலடி – ரசிகர்கள் அதிருப்தி

“எனவே அதே போன்றதொரு மாற்றம் எனது கேரியரிலும் நிகழும் என்று நம்புகிறேன். இங்கு விளையாடும் அனுபவத்தை நான் எடுத்துக் கொண்டு வருவேன். அதனால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் இங்கு கற்றுக் கொண்ட யுக்திகளை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்” என்று கூறினார். இருப்பினும் அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துவிட்டதால் வெள்ளை பந்து இந்திய அணியில் இவர் கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement