டி20 உ.கோ’யில் உலகசாதனை படைத்த இளம் அமீரக வீரரை – கலாய்த்த இங்கிலாந்தை வெளுக்கும் ரசிகர்கள், வீடியோ இதோ

Aayan Khan
- Advertisement -

அனைவரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்ல 16 அணிகள் களமிறங்கியுள்ள நிலையில் முதல் நாளன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆசிய சாம்பியன் இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த நமீபியா முதல் வெற்றியை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு கீலோங் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமராக செயல்பட்டு 111/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு தொடக்க வீரர் வசீம் அதிகபட்சமாக 41 (47) ரன்கள் எடுத்த நிலையில் சூரி 12 (20) தாவூத் 15 (14) அரவிந்த் 18 (21) பரிட் 2 (4) ஹமீத் 4 (4) கேப்டன் ரிஸ்வான் 1 (2) என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்தளவுக்கு கட்டுக்கோப்பாக பந்து வீசிய நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக டீ லீடி 3 விக்கெட்டுகளையும் க்ளாஸென் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 112 என்ற சுலபமான இலக்கை துரத்திய நெதர்லாந்தை எளிதாக வெல்லவிடாமல் அமீரக அணியும் முடிந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு போராடியது.

- Advertisement -

உலக சாதனை வீரர்:
இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததையும் முக்கிய நேரத்தில் அமீரக வீரர்கள் கோட்டை விட்ட கேட்ச்களையும் பயன்படுத்திய நெதர்லாந்துக்கு விக்ரம்ஜிட் சிங் 10 (7) மேக்ஸ் ஓ’தாவூத் 23 (18) டீ லீடி 14 (18) கோலின் அக்கர்மேன் 17 (19) கூப்பர் 8 (16) கேப்டன் எட்வர்ட்ஸ் 16* (19) ப்ரிங்கள் 15 (16) என அனைத்து பேட்ஸ்மேன்களும் தேவையான ரன்களை எடுத்தனர். அதனால் கடைசி ஓவரில் 1 பந்து மீதம் வைத்து 112/7 ரன்கள் எடுத்த நெதர்லாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் கடுமையாகப் போராடி வென்றது. அமீரகம் சார்பில் அதிகபட்சமாக சித்திக் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றியால் முதல் சுற்றின் குரூப் ஏ புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளைப் பெற்றுள்ள நெதர்லாந்து 2வது இடத்தை பிடித்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் அணிக்காக 16 வயதில் அறிமுகமான இளம் வீரர் ஆயன் அப்சல் கான் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் விளையாடிய வீரர் என்ற பாகிஸ்தானின் முகமது ஆமீர் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. ஆயன் அப்சல் கான் : 16 வருடம் 335 நாட்கள்*
2. முகமது ஆமிர் : 17 வருடம் 55 நாட்கள்
3. ரஷீத் கான் : 17 வருடம் 170 நாட்கள்
4. அகமது சேஷாத் : 17 வருடம் 196 நாட்கள்

- Advertisement -

சுழல் பந்து வீச்சாளரான அவர் தன்னுடைய அறிமுக போட்டியில் பந்து வீச்சில் 3 ஓவர்களில் 15 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து அசத்தலாகவே செயல்பட்டார். இருப்பினும் பேட்டிங்கில் 19வது ஓவரில் களமிறங்கிய அவர் 7 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களில் அவுட்டானார். பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் களமிறங்கும் இளம் வீரர்களுக்கு படபடப்பும் பதற்றமும் இருக்கும். அதற்கு விதிவிலக்கல்லாத இவரும் 5 ரன்களில் அவுட்டானதால் பதற்றத்தில் பெவிலியன் நோக்கி நடந்து சென்ற போது பவுண்டரி எல்லையை கவனிக்காமல் கால் தடுக்கி கீழே விழுந்தார்.

அப்போது அந்த இடத்தில் அமர்ந்திருந்த அனைத்து ரசிகர்களும் அவருக்கு என்னவாயிற்று என்று உடனடியாக எழுந்து பார்த்தனர். நல்ல வேளையாக அவருக்கு எந்த காயமும் ஏற்படாததால் உடனடியாக எழுந்து பெவிலியனுக்கு நடந்து சென்றார். பொதுவாகவே இது போல் யாராவது கீழே விழுந்தால் நிறைய பேருக்கு சிரிப்பு ஏற்படும். இருப்பினும் இளம் வீரரான இவர் விழுந்த போது அருகிலிருந்த ரசிகர்கள் கூட கொஞ்சமும் சிரிக்காமல் என்னவாயிற்று என்று பார்த்தனர்.

ஆனால் அவர் விழுந்ததை பார்த்த இங்கிலாந்து ரசிகர்களின் அதிகாரப்பூர்வ பக்கமான பார்மி ஆர்மி அவரை கலாய்த்து ட்விட்டரில் சிரித்துள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் இளம் வீரர் கீழே விழும் போது அவரின் மீது கரிசனம் காட்டாமல் இதில் என்ன சிரிப்பு உள்ளது என்று பதிலடி கொடுக்கின்றனர். மேலும் உங்கள்து நாட்டு இளம் வீரர் இப்படி விழுந்திருந்தால் சிரிப்பீர்களா என்று சாடும் ரசிகர்கள் ஒருவேளை இதுதான் ஆங்கிலேயரின் அதிகார சிரிப்போ என்றும் விமர்சிக்கின்றனர்.

Advertisement