ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் 27 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி மே 19ஆம் தேதி சார்ஜாவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 205/5 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் கேப்டன் லிட்டன் தாஸ் 40 (32), தன்சிம் ஹசன் 59 (32) ரன்கள் குவித்தனர். மிடில் ஆர்டரில் நஜ்முல் சாண்டோ 27, தௌஹீத் ஹ்ரிடாய் 45 ரன்கள் எடுத்தார்கள். அமீரகம் அணிக்கு அதிகபட்சமாக முகமது ஜவாதுல்லா 3, சாகிர் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அமீரகம் அபாரம்:
அடுத்ததாக விளையாடிய அமீரகம் அணிக்கு துவக்க வீரர்கள் கேப்டன் முகமது வாசிம் – முகமது ஜூஹைப் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஓவருக்கு 10 ரன்கள் குவித்தனர். அதில் ஜூஹைப் நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் கேப்டன் வாசிம் அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 10 ஓவரில் 107 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த அந்த ஜோடியில் ஜூஹைப் 38 (34) ரன்னில் அவுட்டானார்.
அடுத்து வந்த ராகுல் சோப்ரா 2 ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய கேப்டன் வாசிம் 82 (42) ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தார். அதைப் பயன்படுத்திய வங்கதேசம் மிடில் ஆர்டரில் ஆசிப் கான் 8, அலிசான் ஷாராபு 13, சாகிர் கான் 8, ஆர்யான்ஸ் சர்மா 7 ரன்களில் அவுட்டாக்கியது. அதனால் வங்கதேசம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் இளம் வீரர் ஹைதர் அலி அதிரடியாக விளையாடினார்.
உலக சாதனை சேசிங்:
அவருடைய அதிரடியால் கடைசி ஓவரில் அமீரகத்திற்கு 13 ரன்கள் தேவைப்பட்டது அப்போது மறுபுறம் போராடிய துருவ் பராசர் 2வது பந்தில் சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் 11 (7) ரன்களில் அவுட்டானதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மறுபுறம் அசத்தலாக விளையாடிய ஹைதர் அலி கடைசி 2 பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது 5வது பந்தில் டபுள் எடுத்தார். அந்த வகையில் மொத்தம் 15* (6) ரன்கள் அடித்த அவர் சிறப்பான ஃபினிஷிங் கொடுத்ததால் 19.5 ஓவரில் அமீரகம் 206/8 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: இது தேவையா தம்பி.. திக்வேஷ்’க்கு தடை விதித்த பிசிசிஐ.. அபிஷேக்கிற்கு அபராதத்துடன் தண்டனை
அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்தை தோற்கடித்த அமீரகம் புதிய சரித்திர வெற்றியைப் பெற்று 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முழு அந்தஸ்து பெற்ற நாட்டுக்கு எதிராக அதிகபட்ச இலக்கை (206) வெற்றிகரமாக சேசிங் செய்த உறுப்பு நாட்டு அணியாகவும் அமீரகம் உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 191 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய சாதனை.



