
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது. அந்தத் தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு அணியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. செப்டம்பர் பத்தாம் தேதி துபாயில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய அமீரக அணிக்கு அதிரடி காட்ட முயற்சித்த அலிசான் சராஃபு 22 (17) ரன்களில் பும்ராவின் துல்லியமான யார்கர் பந்தால் க்ளீன் போல்ட்டானார். அடுத்து வந்த முகமது சோஹைப் 2 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் அவுட்டானார். அதோடு நிற்காத குல்தீப் 9வது ஓவரின் 1, 4, 6வது பந்துகளில் முறையே கேப்டன் முகமது வாசிம் 19, ராகுல் சோப்ரா 3, ஹர்ஷித் கௌசிக்கை 2 ரன்களில் அவுட்டாக்கி தெறிக்க விட்டார்.
அதனால் 50/5 என சரிந்த அமீரகத்துக்கு லோயர் ஆர்டரில் ஆசிப் கான் 2, ஹர்ஷித் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். அடுத்து வந்த அமீரக வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பும் அளவுக்கு இந்திய அணி மிரட்டலாக பௌலிங் செய்தது. இறுதியில் அமீரகத்தை 13.1 ஓவரில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி இந்தியா தெறிக்க விட்டது.
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனையை அமீரகம் படைத்துள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு அஹமதாபாத் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனை. அத்துடன் அமீரகம் தங்களுடைய குறைந்தபட்ச டி20 ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.
அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக சிவம் துபே 3, குல்தீப் யாதவ் 4 எடுத்தார்கள். மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா, அக்சர் படேல், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் தலா ஒரு விக்கெட் எடுத்து அசத்தினர். ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா ஏற்கனவே 8 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.
இதையும் படிங்க: ஒரே ஓவரில் ஐக்கிய அரபு அமீரக அணியின் சோளியை முடித்த குல்தீப் யாதவ் – விவரம் இதோ
மேலும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இப்போட்டியில் அமீரகத்தை எளிதாக தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை முதல் இன்னிங்சிலேயே இந்தியா நிரூபித்துள்ளது என்றே சொல்லலாம். அடுத்ததாக 58 ரன்களை துரத்தி எளிதாக வெற்றி பெற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.