337/9 டூ 569 ரன்ஸ்.. பரோடாவை சூறையாடிய டெயில் எண்டர் ஜோடி உலக சாதனை.. சிஎஸ்கே வீரர் வரலாற்று சாதனை

Tushar Deshpandey
- Advertisement -

ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசனில் மும்பை மற்றும் பரோடா அணிகள் மோதிய காலிறுதி போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி மகாராஷ்டிராவில் தொடங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்து 384 ரன்கள் குவித்தது. மும்பைக்கு அதிகபட்சமாக முஷீர் கான் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே இரட்டை சதமடித்து 203* ரன்கள் எடுக்க பரோடா சார்பில் அதிகபட்சமாக பார்கவ் பாட் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பரோடா முடிந்தளவுக்கு போராடியும் 348 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சஸ்வத் ராவத் 124, கேப்டன் விஷ்ணு சோலங்கி 136 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக சாம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 36 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய மும்பைக்கு பூபேன் லால்வாணி 6, மோகித் அவஸ்தி 4, முஷீர் கான் 33, கேப்டன் ரகானே 0, சுயன்ஸ் செக்டே 10, சர்துள் தாகூர் 10 ரன்களில் அவுட்டானாலும் ஹர்டிக் தாமோர் சதமடித்து 114 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அரிதான சாதனை:
அவருடன் பிரிதிவி ஷா 87, சாம்ஸ் முலானி 64 ரன்கள் எடுத்ததால் மும்பை 337/9 ரன்கள் எடுத்து நல்ல நிலையை எட்டியது. அப்போது கடைசி விக்கெட்டையும் பரோடா எளிதாக எடுத்து மும்பையை ஆல் அவுட் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 10 மற்றும் 11வது பேட்ஸ்மேன்களாக ஜோடி சேர்ந்த டானுஷ் கோடியன் மற்றும் துஷார் தேஷ்பாண்டேஆகியோர் பரோடா பவுலர்களுக்கு தங்களுடைய பாணியில் சவாலை கொடுத்தனர்.

பொதுவாகவே இது போன்ற பெரியளவில் பேட்டிங் தெரியாத டெயில் எண்டர்கள் ஏதோ ஒரு வகையில் பேட்டை சுற்றி எதிரணியை கடுப்பேற்றி வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய ரன்களை எடுப்பார்கள். ஆனால் இப்போட்டியில் அதையும் தாண்டி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்த இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி சதமடித்து ஒரு வழியாக பிரிந்தது.

- Advertisement -

அதில் டானுஷ் கோடியன் 10 பவுண்டரி 4 சிக்சருடன் 120* (129) ரன்களும் துஷார் தேஷ்பாண்டே 10 பவுண்டரி 8 சிக்சருடன் 123 (129) ரன்களும் விளாசினார். இதன் வாயிலாக முதல் தர கிரிக்கெட்டில் 10, 11வது இடத்தில் களமிறங்கி சதமடித்த ஜோடி என்ற உலக சாதனையை இவர்கள் சமன் செய்துள்ளனர். இதற்கு முன் கடந்த 78 வருடங்களுக்கு முன்பாக 1946இல் நடைபெற்ற சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியன்ஸ் அணிக்காக 10, 11வது இடத்தில் களமிறங்கிய சந்து சர்வேட் 124*, ஷுட்டே பேனர்ஜி 121 ரன்கள் அடித்திருந்தனர்.

இதையும் படிங்க: சர்பராஸ் கான் மட்டும் என்ன ஸ்பெஷலா? துருவ் ஜுரேலுக்கு ஆதரவாக – ஆனந்த் மஹேந்திராவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

இதில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே 11வது இடத்தில் களமிறங்கி 123 அடித்துள்ளார். அதன் வாயிலாக ரஞ்சிக் கோப்பையில் 11வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2001 தொடரில் டெல்லிக்கு எதிராக தமிழ்நாடு வீரர் சிவராமகிருஷ்ணன் 115 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் 11வது விக்கெட்டுக்கு 232 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்டு பரோடாவை கடுப்பேற்றிய இந்த ஜோடியால் மும்பை 569 ரன்கள் குவித்தது. பரோடா சார்பில் அதிகபட்சமாக பார்க்க பாட் 7 விக்கெட்டுகள் எடுத்தார்

Advertisement