
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜூலை 25ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு டாலஸ் நகரில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டிஎஸ்கே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய எம்ஐ அணிக்கு முதல் ஓவரிலேயே தேவால்ட் பிரேவிஸ் டக் அவுட்டானார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் 8 (9) ரன்னில் ஸ்டோய்னிஸ் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு ஜஹாங்கீர் மற்றும் மோனக் பட்டேல் ஆகியோர் நிதானமாக விளையாட முயற்சித்தனர்.
டிஎஸ்கே அசத்தல்:
இருப்பினும் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறிய அந்த ஜோடியில் ஜஹாங்கீர் 26 (23) ரன்களிலும் மோனக் படேல் 48 (41) ரன்களிலும் அவுட்டானார்கள். ஆனால் 5வது இடத்தில் பேட்டிங் செய்த ரசித் கான் தம்முடைய ஸ்டைலில் 4 பவுண்டரி 4 சிக்ஸரை பறக்கவிட்டு 55 (30) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் அடுத்ததாக வந்த கேப்டன் பொல்லார்ட் 6 (3) ரன்னில் அவுட்டானதால் 20 ஓவரில் எம்ஐ நியூயார்க் 163/8 ரன்கள் எடுத்தது.
டிஎஸ்கே சார்பில் அதிகபட்சமாக ஆரோன் ஹார்டி 2, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 164 ரன்களை துரத்திய டெக்ஸாஸ் அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் – டேவோன் கான்வே ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். குறிப்பாக கான்வே நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் டு பிளேஸிஸ் எம்ஐ பவுலர்களை வெளுத்து வாங்கி அரை சதமடித்தார்.
அந்த வகையில் 13 ஒவர்கள் வரை அட்டகாசமாக விளையாடிய இந்த ஜோடி 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான துவக்கத்தை கொடுத்த போது டு பிளேஸிஸ் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 72 (47) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த ஆரோன் ஹார்டி 3 பவுண்டரி 2 சிக்சருடன் 40* (22) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் டேவோன் கான்வே நிதானமாக விளையாடி 51* (43) ரன்கள் எடுத்ததால் 18.3 ஓவரிலேயே 167/1 ரன்கள் எடுத்த டிஎஸ்கே 9 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: விவாகரத்திற்கு பிறகு தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடாஷா – அதற்கு பாண்டியா போட்ட கமெண்ட்
அதனால் நடப்பு சாம்பியன் எம்ஐ நியூயார்க் அணியை இத்தொடரிலிருந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியது. குறிப்பாக 2023 சீசனில் தங்களை நாக் அவுட் செய்த எம்ஐ அணியை இந்த வருடம் டெக்ஸாஸ் வெளியேற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் டு பிளேஸிஸ் ஆட்டநாயகன் விருது வென்றார். இதைத் தொடர்ந்து ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் சேலஞ்சர் போட்டியில் டெக்சாஸ் விளையாட உள்ளது.