நம்பி வாய்ப்பு கொடுங்க ! கேப்டனிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய இளம் வீரர் – நடந்தது இதோ

Rovman Powell 3
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு செல்வதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இதில் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் ஏற்கனவே தொடர் தோல்விகளை சந்தித்து வெளியேறி விட்டதால் எஞ்சிய 8 அணிகள் 4 இடங்களுக்காக போட்டி போடுகின்றன. அதில் புதிய அணிகளாக இருந்தாலும் 16 புள்ளிகளைப் பெற்றுள்ள குஜராத்தும் 14 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோவும் முதல் சீசனிலயே பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதியாகியுள்ளது.

Kane Williamson DC vs SRH

- Advertisement -

எஞ்சிய 2 இடங்களுக்கு ராஜஸ்தான், பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய 6 அணிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து 5-வது இடம் பிடித்துள்ளது.

பிளே ஆஃப் போகுமா டெல்லி:
அந்த அணியின் பிளே ஆப் சுற்றுக்கு கனவில் தனது 10-வது லீக் போட்டியில் நேற்று ஹைதராபாத்தை எதிர்கொண்டு 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 207/3 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் 12 பவுண்டரி 3 சிக்சருடன் 92* (58) ரன்கள் எடுக்க அவருடன் கைகோர்த்து கடைசி 10 ஓவர்களில் ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவெல் 3 பவுண்டரி 6 சிக்சருடன் 67* (35) ரன்கள் எடுத்து மிரட்டலான பினிஷிங் கொடுத்தார்.

warner

அதை தொடர்ந்து 208 என்ற இமாலய இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் 4 (11) அபிஷேக் சர்மா 7 (6) ராகுல் திரிபாதி 22 (18) போன்ற டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில் மிடில் ஆர்டரில் ஐடன் மார்க்ரம் 42 (25) நிக்கோலஸ் பூரன் 62 (34) ரன்களை அதிரடியாக எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 186/8 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி பரிதாபமாக தோற்றது. இந்த வெற்றிக்கு 92* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

சொல்லி அடித்த போவெல்:
இருப்பினும் வார்னரை விட கடைசி நேரத்தில் அதிரடியாக 67* ரன்களை அதுவும் 191.43 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் தெறிக்கவிட்ட இளம் வீரர் ரோவ்மன் போவெல் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். இதற்கு முந்தைய போட்டிகளில் 6, 7, 8 என லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர் நேற்றைய போட்டியில் முதல் முறையாக 5-வது இடத்தில் களமிறங்கி சக்கைப்போடு போட்டார். இதற்காக கேப்டன் ரிஷப் பண்ட்’டிடம் ஸ்பெஷலாக அனுமதி கேட்டு விளையாடியதாக நேற்றைய போட்டி முடிந்த பின் ரோமன் போவல் தெரிவித்தார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சில வருடங்களாக சுழல் பந்து வீச்சுக்கு எதிராக எனது பேட்டிங் முன்னேறியுள்ளது. ஏற்கனவே வேகப்பந்து வீச்சை நான் மிகச்சிறப்பாக எதிர்கொள்கிறேன். இந்த போட்டிக்கு முன்பாக அவரின் (ரிஷப் பண்ட்) அறைக்குள் சென்று “என்னை நம்பி 5-வது இடத்தில் பேட்டிங் செய்ய தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுங்கள். நானும் அவ்வாறுதான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். 20 பந்துகளை சந்தித்த பின் அதிரடியாக பேட்டிங் செய்ய முயற்சிப்பேன்” என்று மட்டும் தெரிவித்தேன்” என கூறினார்.

அவரின் தன்னம்பிக்கை மதித்த ரிஷப் பண்ட் நேற்றைய போட்டியில் அவர் கேட்டதற்கிணங்க 5-வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை வழங்கினார். அந்த நிலையில் கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில் அதிரடி காட்டிய ரோமன் போவல் டெல்லியின் வெற்றிக்கு துருப்பு சீட்டாக செயல்பட்டது உண்மையாவே பாராட்டத்தக்கதாகும்.

powell 1

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நான் மிகவும் கடினமாக உழைத்து நல்ல பார்முடன் ஐபிஎல் தொடருக்கு வந்துள்ளேன் என்பது எனக்கு தெரியும். அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரின் துவக்கம் எனக்கு கடினமாக அமைந்தது என்றாலும் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். மேலும் 8-வது இடத்தில் பேட்டிங் செய்வது எனக்கு ஏமாற்றமாக இருப்பதாக ரிஷப் பண்ட் மற்றும் ரிக்கி பாண்டிங் இவரிடமும் தெரிவித்திருந்தேன். இருப்பினும் போட்டியில் சூழ்நிலைக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் களமிறங்கவும் தயாராக இருந்தேன். ஆனாலும் ரிஷப் பண்ட் மற்றும் பாண்டிங் ஆகியோர் எனது விஷயத்தில் நல்ல முடிவை எடுத்து இப்போது முன்கூட்டியே களமிறங்கும் வாய்ப்பை கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

Advertisement