
அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடி 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நாதன் மெக்ஸ்வீனியை 39 ரன்களில் வேகத்தில் அவுட்டாக்கிய பும்ரா அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தை 2 ரன்களில் காலி செய்தார். இருப்பினும் மறுபுறம் அசத்திய மார்னஸ் லபுஸ்ஷேன் அரை சதத்தை அடித்து 64 ரன்கள் குவித்த போது நித்திஷ் ரெட்டி வேகத்தில் திரும்பினார்.
ஆனால் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் டிராவிஸ் ஹெட் வழக்கம் போல இந்தியாவை அபாரமாக எதிர்கொண்டார். எதிர்புறம் மிட்சேல் மார்ஷ் 9, அலெக்ஸ் கேரி 15 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் இந்திய பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்ட ஹெட் நேரம் செல்ல செல்ல தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடி சதத்தை அடித்தார்.
குறிப்பாக 111 பந்துகளில் 100 ரன்கள் அடித்த அவர் பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற தன்னுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2022ஆம் ஆண்டு ஹோபார்ட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் 112 பந்துகளில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 17 பவுண்டரி 4 சிக்ஸருடன் 140 (141) ரன்கள் குவித்து சிராஜ் வேகத்தில் போல்டானார். அப்போது அவரை கோபத்துடன் சிராஜ் வழி அனுப்பினார். அதற்கு பதிலடி கொடுத்ததால் களத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிராஜுக்கு எதிராக கூச்சலிட்டார்கள்.
இதையும் படிங்க: 2 – 3 வருசம் ஆச்சு.. கேரியர் முடியும் தவறான முடிவை ரோஹித் எடுத்துருக்காரு.. கவாஸ்கருக்கு பாண்டிங் மறுப்பு
அந்த நிலையில் இரண்டாவது நாள் இரவு உணவு இடைவெளியில் ஆஸ்திரேலியா 332-8 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 152 ரன்கள் நிலை பெற்றுள்ளது. அதன் காரணமாக இந்த போட்டியில் அந்த அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து வெற்றி வாய்ப்பை உருவாக்கி வருகிறது. மறுபுறம் இந்திய அணி ரோகித் தலைமையில் பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் கொஞ்சம் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறது.