ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காபா கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது போட்டியில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் முடிவில் 405-7 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக மீண்டும் டிராவிஸ் ஹெட் சதத்தை அடித்து 152, ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் குவித்தனர். இந்தியாவுக்கு இதுவரை அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முன்னதாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலை தொடர்ந்து கடந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் சதமடித்து இந்தியாவை தோற்கடித்தார்.
இந்தியாவை மிரட்டும் ஹெட்:
அதே போல இந்தப் போட்டியிலும் அபாரமாக விளையாடிய அவர் இந்திய அணியின் பலம், பலவீனம் பற்றிய ப்ளூ பிரிண்ட் தம்மிடம் இருப்பதாலேயே அவர்களுக்கு எதிராக தொடர்ந்து அசத்த முடிவதாக கூறியுள்ளார். மேலும் இத்தொடரை வென்று அடுத்து நடைபெறும் இலங்கை தொடரையும் கைப்பற்றி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியாவை செல்ல விடாமல் தாங்கள் செல்வோம் என்றும் அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஹெட் பேசியது பின்வருமாறு. “அடிலெய்ட் போட்டியில் அடித்த சதத்துக்கு பின் இதை செய்தது மிகவும் ஸ்பெஷல். இவை அனைத்தும் நேர்மறையாக இருந்து களத்தில் நேரத்தை செலவிடுவதைப் பற்றியதாகும். எங்கள் டாப் 3 பேட்ஸ்மேன்கள் புதிய பந்துக்கு எதிராக நன்றாக விளையாடினார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள். அவர்களது ஆட்டத்தாலேயே என்னால் மிடில் ஆர்டரில் அதிரடியாக எளிதாக விளையாட முடிகிறது”
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்:
“புதிய பந்திலும் நேர்மறையாக இருந்த எனக்கு அதிரடியாக விளையாடுவது வேடிக்கையானது. நான் நீண்ட நேரம் பெரிய இன்னிங்ஸ் விளையாட விரும்புகிறேன். ஜஸ்ப்ரித் பும்ரா கடினமாக பந்து வீசுவதால் அவரை எதிர்கொள்வது எப்போதும் கடினம். ஸ்மித் தன்னுடைய கால்களை நகர்த்தி நன்றாக விளையாடினார். அவருடைய ஆட்டம் மறுபக்கம் எனக்கு நன்றாக விளையாட உதவியது”
இதையும் படிங்க: 5 விக்கெட்ஸ்.. தனியாளாக போராடும் இந்தியாவின் துருவ நட்சத்திரம் பும்ரா.. கபில் தேவை முந்தி 2 மகத்தான சாதனை
“இந்தியாவுக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளதால் அவர்களின் ப்ளூ பிரிண்ட் என்னிடம் இருக்கிறது. சுழலுக்கு எதிராக துவங்குவது பதற்றமாக இருந்தாலும் ஜடேஜாவை இன்று நன்றாக எதிர்கொண்டேன். டாப் 6 பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு நன்றாக அடித்தளத்தை அமைத்துள்ளார்கள். இலங்கைக்கு எதிராகவும் நன்றாக செயல்பட்டு நாங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்வோம் என்று நம்புகிறோம். ஸ்டீவ் ஸ்மித் ஃபார்முக்கு திரும்பியதை பார்ப்பது நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.



