அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் டிசம்பர் 6ஆம் தேதி துவங்கிய இரண்டாவது இளஞ்சிவப்பு நிறம் பந்து டெஸ்ட் போட்டியில் ரோஹித் தலைமையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் சதத்தை அடித்து 140 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிராஜ், பும்ரா தலா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இந்தியா போராட்டம்:
அதன் பின் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 128-5 என திணறி வருகிறது. ஜெய்ஸ்வால் 24, ராகுல் 7, விராட் கோலி 11, கேப்டன் ரோஹித் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். களத்தில் ரிஷப் பண்ட் 28*, நிதிஷ் ரெட்டி 15* ரன்கள் எடுத்தார்கள். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய பவுலர்கள் உண்மையாகவே நன்றாக பந்து வீசியதாக டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை சமாளிக்க கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாடியதாக கூறும் அவர் தனது திட்டம் பற்றி பேசியது பின்வருமாறு. “கொஞ்சம் ரன்கள் குவித்தது நன்றாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இப்படி ரன்கள் குவிப்பது நல்லது. இந்த கடினமான பிட்ச்சில் இந்தியா நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் நான் என்னுடைய வாய்ப்புகளை எடுத்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளேன்”
சிராஜுடன் மோதல்:
“நாங்கள் டாமினேட் செய்யும் நிலையில் இல்லை என்றாலும் சிறந்த நிலையில் இருக்கிறோம். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களிடம் தரம் இருக்கிறது. எனவே அவர்களுடைய ஃபீல்டிங் மேலே இருந்ததால் நான் என்னுடைய ரிஸ்க் எடுத்து விளையாடினேன். சதத்தை அடித்த போது புதிதாக சில வாரங்களுக்கு முன் பிறந்த என்னுடைய மகனுக்காக அப்படி கொண்டாடினேன்”
இதையும் படிங்க: ஆஸி 11.6%.. வெறும் 4.6% வீசி 128/5 என சரிந்த இந்தியா.. திட்டத்தில் சொதப்பி தோல்வியை தவிர்க்க போராட்டம்
“சிராஜிடம் அவுட்டான பந்தை நீங்கள் நன்றாக வீசியதாக சொன்னேன். ஆனால் அதை அவர் வேறு விதமாக புரிந்து கொண்டு என்னிடம் வந்து வெளியேறுங்கள் என்ற வகையில் சொன்னார். அப்படி நடந்ததை பார்த்து கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன். ஆனால் அவர்கள் அப்படித் தான் தங்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்றால் அது அப்படியே இருக்கட்டும்” என்று கூறினார்.



