
அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது. முன்னதாக அந்தப் போட்டியில் 140 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இந்தியாவின் வெற்றியை பறித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
அப்போட்டியில் அவரை அவுட்டாக்கிய முகமது சிராஜ் தம்மையும் இந்திய அணியும் அடித்த விரக்தியில் வெளியே செல்லுங்கள் என்ற வகையில் கோபமாக வழி அனுப்பினார். அதற்கு டிராவிஸ் ஹெட்டும் சில வார்த்தைகளை சொல்லிக் கொண்டே அங்கிருந்து சென்றார். மறுபுறம் தங்களுடைய வீரரை அப்படி அனுப்பிய சிராஜுக்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
பின்னர் அன்றைய நாளின் முடிவில் “நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்” என்று சொன்னதற்காக சிராஜ் அப்படி நடந்து கொண்டது ஏமாற்றத்தைக் கொடுத்ததாக டிராவிஸ் ஹெட் தெரிவித்தார். ஆனால் ஹெட் சொன்னது பொய் என்று சொன்ன சிராஜ் அவர் தம்மிடம் சில மோசமான வார்த்தைகளை பேசியதாலயே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறினார். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்தப் போட்டியில் 2.5 விதிமுறையை மீறி எதிரணி வீரரை இழிவுபடுத்தும் மொழி, செயல்கள், செய்கைகளை சிராஜ் பயன்படுத்தியதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதே போல டிராவிஸ் ஹெட் 2.13 விதிமுறையை மீறி எதிரணி வீரரை தனிப்பட்ட முறையில் திட்டியதாகவும் ஐசிசி கூறியுள்ளது. அந்த வகையில் அவர்கள் இருவர் மீதும் தவறு இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அதனால் அந்த இருவருக்கும் அந்தப் போட்டியின் சம்பளத்திலிருந்து தலா 20% அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் அந்த இருவருக்கும் தலா 1 கேரியர் கருப்பு புள்ளி தண்டனையாக வழங்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. இதை இருவருமே ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஐசிசி கூறியுள்ளது.
இதையும் படிங்க: முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் மோதல் குறித்து 2 அணிகளின் கேப்டன்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
இதற்கிடையே அதே போட்டியில் பேட்டிங் செய்ய சென்ற சிராஜ் அருகே நின்ற ஹெட்டிடம் தாமாக சென்று சில சமாதான வார்த்தைகளை பேசினார். அதன் முடிவில் இருவரும் ஜென்டில்மேன்களாக கை கொடுத்து புன்னகையுடன் வெளியேறினார்கள். மேலும் தவறான புரிதலால் அப்படி நடந்து கொண்டதாக சிராஜ் தம்மிடம் கூறியதாக டிராவிஸ் ஹெட் தெரிவித்தார். அதனால் அந்த இருவருக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.