மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது மும்பை அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தோல்வியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்துள்ளது. அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றிபெற்ற மும்பை 3 வெற்றிகளுடன் 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ரசலுக்கு அடுத்து 2 ஆவது வீரராக டிராவிஸ் ஹெட் நிகழ்த்திய சாதனை :
இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் அந்த அணியின் துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் ஐபிஎல் வரலாற்றில் ஆண்ட்ரே ரசலுக்கு அடுத்து இரண்டாவது வீரராக மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கையில் துவக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 29 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் குவித்திருந்த வேளையில் வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் மிட்சல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டிராவிஸ் ஹெட் படைத்த சாதனை யாதெனில் :
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களை அடித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான ஆன்ட்ரே ரசல் முதலிடத்தில் இருக்கிறார். ரசல் ஐபிஎல் போட்டிகளில் 545 பந்துகளில் 1000 ரன்களை குவித்து அதிவேகமாக 1000 ரன்களை ஐபிஎல் போட்டிகளில் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு அடுத்து நேற்றைய போட்டியில் டிராவிஸ் ஹெட் தான் சந்தித்த 575 வது பந்தில் 1000 ரன்களை பூர்த்தி செய்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற என்ற பெருமையை பெற்றார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹென்றிச் கிளாஸஸ் 594 பந்துகளிலும், நான்காவது இடத்தில் வீரேந்திர சேவாக் 604 பந்துகளிலும், ஐந்தாவது இடத்தில் கிளன் மேக்ஸ்வெல் 610 பந்துகளிலும் 1000 ரன்களை கடந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆரம்பத்துல அந்த விடயம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.. இப்போ எல்லாம் ஓகே – ஆட்டநாயகன் வில் ஜேக்ஸ் மகிழ்ச்சி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தனது கரியரை டிராவிஸ் ஹெட் துவங்கியிருந்தாலும் தற்போது சன் ரைசர்ஸ் அணியில் நிரந்தர இடத்தை பிடித்து விளையாடி வரும் அவர் இதுவரை 32 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 37 ரன்கள் சராசரியுடனும், 174 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 1006 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



