இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் இருக்கும் குவாலியர் நகரில் துவங்குகிறது.
2010ஆம் ஆண்டு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200* ரன்கள் குவித்து வரலாறு படைத்த பின் அந்த மைதானம் இடிக்கப்பட்டது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள அந்த மைதானத்தில் 14 வருடங்கள் கழித்து மீண்டும் சர்வதேச போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தங்கள் அணியின் ஜாம்பவான் சாகிப் அல் ஹசனை வங்கதேச அணி மிஸ் செய்யும் என்று அந்நாட்டின் வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் கூறியுள்ளார்.
ஷாகிப் இல்லாமல்:
மேலும் குவாலியர் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதில் தங்களுடைய ஸ்பின்னர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஹ்ரிடாய் பேசியது பின்வருமாறு. “டி20 என்பது ரன்களை பொறுத்ததாகும். அதில் ஒவ்வொரு அணியும் பெரிய ரன்கள் குவிக்க விரும்புவார்கள்”
“இந்த மைதானத்தில் நீண்ட காலமாக எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. இது புதிய மைதானம். எனவே இங்குள்ள சூழ்நிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. பயிற்சி ஆடுகளத்தை பார்க்கும் போது பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்று தெரிகிறது. இது போன்ற சூழ்நிலையில் பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு வாய்ப்பில்லை. ஐபிஎல் போட்டிகளும் நடைபெறவில்லை”
இந்தியாவை வீழ்த்துவோம்:
“சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதும் அழுத்தம் இருக்கும். ஆனால் அதைப்பற்றி சிந்தித்தால் சிறப்பாக செயல்பட முடியாது. எப்படி அசத்த முடியும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஷாகிப் பாய் இல்லை. அவரை நாங்கள் மிஸ் செய்வோம். ஆனால் அனைவரும் ஒருநாள் சென்றாக வேண்டும். இருப்பினும் அவர் இல்லாமலேயே நாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்புகிறோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: வங்கதேச தொடரில் அவங்க தான் புதிய ஓப்பனிங் ஜோடி.. குவாலியரில் அதிரடி இருக்கு.. சூர்யகுமார் பேட்டி
முன்னதாக சமீபத்தில் பாகிஸ்தானில் வீழ்த்தியதைப் போல இந்தியாவையும் தோற்கடிப்போம் என்று வங்கதேச அணியினர் இப்படி சவால் விடுத்தனர். ஆனால் முதல் போட்டியிலேயே 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தெறிக்க விட்ட இந்தியா இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக 2வது போட்டியில் 2 நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட பின்பும் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா மிரட்டலான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



