- Advertisement -
கிரிக்கெட் செய்திகள் | Today Cricket news in Tamil

டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற டாப் 7 வீரர்களின் பட்டியல்

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் தங்களுடைய அணியில் இடம் பிடித்துள்ள இதர 10 வீரர்களை காட்டிலும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்குவார்கள். அந்த வகையில் சாதாரண இருதரப்பு தொடர்களில் சிறப்பாக செயல்படுவதை ஐசிசி நடத்தும் உலக கோப்பை போன்ற அழுத்தம் வாய்ந்த பெரிய தொடரில் சவாலை கொடுக்கும் எதிரணியை சமாளித்து எஞ்சிய 10 வீரர்களை மிஞ்சும் அளவுக்கு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாட்டுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பது ஒரு வீரருக்கு கடினமான காரியமாகும்.

அதையும் கடந்து சாதிக்கும் வீரர்களின் ஆட்டத்தை பாராட்டும் வகையிலேயே இறுதியில் ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். அந்த வகையில் பெரும்பாலான வீரர்களால் அந்த சவாலை சமாளித்து ஓரிரு போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும். ஆனால் உலகத்தரம் வாய்ந்த வீரர்களால் மட்டுமே நிறைய போட்டிகளில் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக நின்று வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து நிறைய ஆட்ட நாயகன் விருதுகளை வெல்ல முடியும். அந்த வகையில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

7. ஏபி டிவில்லியர்ஸ் 4: எப்பேர்ப்பட்ட பவுலர் எப்படி பந்து வீசினாலும் உருண்டு புரண்டு படுத்துக் கொண்டு நாலாபுறமும் சிக்சர்களை தெறிக்கவிடும் திறமையைப் பெற்ற இவர் டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியவர் என்றே கூறலாம். அந்த வகையில் 30 உலக கோப்பை போட்டிகளில் விளையாடிய அவர் 717 ரன்களை குவித்து 4 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்று தனது தேசத்துக்கு வெற்றிகளை பரிசாக்கியுள்ளார்.

6. திலகரத்னே தில்ஷான் 4: அதிரடி தொடக்க வீரரான இவர் 2009 உலகக் கோப்பையில் பைனல் வரை இலங்கையை அழைத்துச் சென்றதற்கும் 2014இல் சாம்பியன் பட்டம் வென்றதற்கும் முக்கிய பங்காற்றியவர். அந்த வகையில அந்நாட்டிற்காக 35 உலக கோப்பை போட்டிகளில் விளையாடிய அவர் 897 ரன்களைக் குவித்து 4 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதுகளை வெல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு இந்த பட்டியலில் 6வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

5. ஷாஹித் அஃப்ரிடி 4: பாகிஸ்தானின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான இவர் 35 போட்டிகளில் 546 ரன்களையும் 39 விக்கெட்டுகளையும் எடுத்து 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று டி20 உலக கோப்பையில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற பாகிஸ்தான் வீரராக சாதனை படைத்துள்ளார்.

4. ஷேன் வாட்சன் 5: ஆஸ்திரேலியாவின் மகத்தான ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படும் இவர் 24 போட்டிகளில் 537 ரன்களையும் 29 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதிலும் 5 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் டி20 உலக கோப்பையில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற ஆஸ்திரேலிய வீரராக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

3. கிறிஸ் கெயில் 5: டி20 கிரிக்கெட்டில் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்த இந்த வெஸ்ட் இண்டீஸ் சூறாவளிப் புயல் 33 போட்டிகளில் 965 ரன்களையும் 10 விக்கெட்டுக்களையும் எடுத்து நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியது. அதிலும் குறிப்பாக 5 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்று தனி ஒருவனாக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் டி20 உலக கோப்பையில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரராக அசத்தியுள்ளார்.

2. மகிளா ஜெயவர்தனே 5: டி20 உலக கோப்பை வரலாற்றில் 1016 ரன்களுடன் அதிக ரன்களைக் குவித்த பேட்ஸ்மேனாக உலகசாதனை படைத்துள்ள இவர் களமிறங்கிய 31 போட்டிகளில் 5இல் ஆட்டநாயகன் விருதுகளை வென்று இலங்கைக்கு தனி ஒருவனாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

1. விராட் கோலி 6: ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் இவர் டி20 உலகக் கோப்பையில் அபரிதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரலாற்றில் 2 தொடர் நாயகன் விருதுகளை (2014, 2016) வென்ற ஒரே வீரராக ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ளார்.

அப்படி தொடர் முழுவதும் அசால்ட்டாக கலக்கும் திறமை பெற்றுள்ள அவர் இந்தியாவுக்காக இதுவரை பேட்டிங்கில் களமிறங்கிய 20 இன்னிங்ஸ்களில் 6 போட்டிகளில் எஞ்சிய பேட்ஸ்மேன்களை காட்டிலும் அபார செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் டி20 உலகக் கோப்பைகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார்.

- Advertisement -
Published by