ஒரே ஓவரில் முரட்டு அடி ! ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் வாரி வழங்கிய டாப் 6 பரிதாப பவுலர்கள்

Harshal
- Advertisement -

ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக ஐபிஎல் பிரசித்தி பெறுவதற்கு அதில் தாறுமாறாக அடிக்கப்படும் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் எதிர்பாராத விக்கெட்டுகளும் முக்கிய காரணமாகும். என்னதான் அவ்வப்போது தரமான பவுலர்கள் தங்களது மேஜிக் நிறைந்த பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடித்தாலும் கூட பெரும்பாலான சமயங்களில் பவுலர்களை புரட்டி எடுக்கும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த தொடராகவே ஐபிஎல் கருதப்படுகிறது. அதே சமயம் இது போன்ற தொடர்களில் ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா போன்ற தரத்திலும் தரமான பவுலர்களை எதிர்கொள்ள எப்போதுமே பேட்ஸ்மேன்கள் யோசிப்பார்கள்.

gayle 1

- Advertisement -

ஆனால் அதற்கு ஈடாக அவர்களுடன் விளையாடும் ஏதேனும் ஒருசில சுமாரான பந்துவீச்சாளர் சிக்கினால் ஒரே ஓவரில் அவர்களை வெச்சு செய்து தேவையான மொத்த ரன்களையும் விளாசி விடுவார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய பவுலர்களை பற்றி பார்ப்போம்.

6. ராகுல் சர்மா: 2012 ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் 182/6 ரன்கள் சேர்க்க அதை துரத்திய பெங்களூருவுக்கு எதிராக 6-வது ஓவரை ராகுல் சர்மா வீசினார்.

அதில் முதல் பந்தை லாவகமாக சௌரப் திவாரி சிங்கிள் எடுக்க அடுத்த 5 பந்துகளில் ராகுல் சர்மாவை கதறகதற தொடர்ச்சியாக 5 சிக்சர்களை வெஸ்ட் இண்டீஸ் சூறாவளி புயல் கிறிஸ் கெயில் பறக்க விட்டார். அந்த ஓவரில் 31 ரன்களை வழங்கிய ராகுல் சர்மா இப்பட்டியலில் 6வது இடம் பிடிக்க 81 (48) ரன்கள் விளாசிய கிறிஸ் கெயில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

5. ரவி போபாரா: 2010 ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த 34-வது லீக் போட்டியில் பஞ்சாப்க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவுக்கு எதிராக 13-வது ஓவரை இங்கிலாந்தின் ரவி போபரா வீசினார். அதில் முதல் பந்தில் மனோஜ் திவாரி சிங்கிள் எடுக்க அடுத்த 4 பந்துகளில் மீண்டும் கிறிஸ் கெய்ல் புயலாக 4 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டார்.

Ravi Bopara

அதனால் கை கால் நடுங்கிய போபாரா 6-வது பந்தில் ஒய்டாக பவுண்டரியும் மீண்டும் ஒய்டாக 2 ரன்களும் கொடுத்து கடைசி பந்தில் 1 ரன்னுடன் ஒருவழியாக 33 ரன்களுடன் ஓவரை முடித்து இந்த பட்டியலில் 5-வது பிடிக்கிறார். இறுதியில் அப்போட்டியில் கொல்கத்தா நிர்ணயித்த 200 ரன்களை சேசிங் செய்த பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

4. பவின்தர் அவானா: 2014 ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் சேவாக் அதிரடியாக 122 (58) ரன்கள் விளாச 227 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய சென்னைக்கு அன்று பார்த்து பவர் பிளே ஓவரில் களமிறங்கி பட்டையை கிளப்பிய சுரேஷ் ரெய்னா பவின்தர் அவானா வீசிய 6-வது ஓவரில் 6, 6, 4, 4 என அடுத்தடுத்து பவுண்டரிகளை தெறிக்கவிட்ட நிலையில் 5-வது பந்தில் வீசிய நோ பாலிலும் பவுண்டரி பறக்கவிட்டார்.

Pavinder Awana

எஞ்சிய 2 பந்துகளையும் பவுண்டரியாக பறக்க வைத்த ரெய்னா அப்போட்டியில் வெறும் 25 பந்துகளில் 87 ரன்கள் விளாசி வரலாற்றில் மிகச்சிறந்த ஐபிஎல் இன்னிங்சை விளையாடினார். இருப்பினும் கூட சென்னை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில் 33 ரன்களை வழங்கிய அவானா இப்பட்டியலில் 4-வது பிடிக்கிறார்.

- Advertisement -

3. டானியல் சாம்ஸ்: இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான ஒரு போட்டியில் 162 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா 15 ஓவர்களில் 127/5 என்ற நிலையில் கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 35 தேவைப்பட்டது. அப்போது  ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் மற்றொரு ஆஸ்திரேலிய பவுலர் டானியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் 6, 4, 6, 4 என மாறி மாறி பவுண்டரிகளை பறக்க விட்டதில குழம்பிய டேனியல் சாம்ஸ் 5-வது பந்தில் நோ பாலுடன் 2 ரன்களை கொடுத்தார்.

Pat Cummins Daniel Sams MI vs KKR

அந்த நிலையில் அடுத்த 2 பந்துகளில் 4, 6 என 35 ரன்களையும் ஒரே ஓவரில் தெறிக்கவிட்ட கம்மின்ஸ் யாருமே எதிர்பாராத வகையில் மிரட்டல் வெற்றியைப் பெற்றுக்கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதமடித்த பேட்ஸ்மேன் என்ற கேஎல் ராகுல் சாதனையையும் சமன் செய்தார்.

2. ஹர்ஷல் படேல்: மேற்குறிப்பிட்ட பவுலர்கள் கூட சுமாரானவர்கள் என்றால் 2021 ஐபிஎல் தொடரில் வலுவான மும்பைக்கு எதிராக ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்கள் என 32 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை அணிந்திருந்த ஹர்ஷல் படேல் சென்னைக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக ஒரே ஓவரில் மொத்தமாக சொதப்பினார்.

Harshal

ஆம் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 19 ஓவர்களில் 154/4 என்ற சுமாரான நிலையில் இருந்த போது பந்து வீசிய ஹர்சல் படேலின் கடைசி ஓவரில் 6, 6, 6 (நோ பால்), 6, 2, 6, 4 என ரன்மழை பொழிந்த ரவீந்திர ஜடேஜா 37 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற வரலாறு படைத்தார். அதனால் சென்னை 191/4 ரன்கள் எடுக்க பின்னர் அதை துரத்திய பெங்களூரு 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

1. பிரசாந்த் பரமேஸ்வரன்: 2011 ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 50-வது லீக் போட்டியில் அப்போதைய கொச்சி அணிக்கு எதிராக முதலில் பந்து வீசிய பெங்களூரு அந்த அணியை 125/9 ரன்களுக்குள் சுருட்டியது. அதை துரத்திய பெங்களூருவுக்கு எதிராக 2-வது ஓவரை பிரசாந்த் பரமேஸ்வரன் வீச அதில் முதல் பந்திலேயே சிக்சரை பறக்க விட்டு கெயில் 2-வது பந்திலும் சிக்ஸர் பறக்க விட அது நோ – பாலாக அறிவிக்கப்பட்டது.

Prasanth Parameswaran

அதனால் அடுத்த 2 பந்துகளில் பவுண்டரி அடித்த கெயில் அதற்கு அடுத்த 2 பந்துகளில் சிக்ஸர்களை வீசி கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். அதனால் 37 ரன்களை வாரி வழங்கிய பிரசாந்த் பரமேஸ்வரன் ஐபிஎல் தொடரில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த பவுலர் என்ற பரிதாபத்துடன் காணாமல் போனார். கடைசியில் அந்த போட்டியில் பெங்களூரு 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

Advertisement