- Advertisement -
ஐ.பி.எல்

பயமறியா இளம் கன்றுகள்! ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் அரைசதம் விளாசிய டாப் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

தரமான இளம் வீரர்களை அடையாளம் காட்டும் உலகத்தரம் வாய்ந்த ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி 4-வது வாரத்தைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடத்தையும் போலவே இந்த சீசனிலும் திலக் வர்மா, ஆயுஷ் படோனி போன்ற இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி தங்களது அபார திறமையால் அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருங்கால சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் ஐபிஎல் போன்ற அழுத்தம் வாய்ந்த கடினமான தொடரில் வாய்ப்பு பெறும் அனைத்து இளம் வீரர்களும் அதில் ஜொலித்து பெரிய அளவில் வருகிறார்களா என்று பார்த்தால் நிச்சயமாக கிடையாது. ஆனாலும் ஒருசில தரமான வீரர்கள் இந்த தரமான தொடரில் பயம் அறியாத இளம் கன்றுகளை போல சீறி பாய்ந்து சிறப்பாக செயல்பட்ட கதைகள் நிறைய உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த டாப் 5 இளம் காளைகளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

5. சுப்மன் கில்: 2018 அண்டர்-19 உலக கோப்பையில் அசத்திய சுப்மன் கில் அதே வருடத்தில் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தமானார். அதில் சென்னைக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 178 ரன்களை துரத்திய கொல்கத்தா ஒரு கட்டத்தில் சரிந்தது.

அந்நிலையில் அப்போதைய கேப்டன் தினேஷ் கார்த்திக் உடன் கைகோர்த்த அவர் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 57* (36) ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அன்று 18 வயது 237 வயதில் அரைசதம் அடித்த அவர் இந்த பட்டியலில் 5-வது இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

4. ரிஷப் பண்ட்: தனது அதிரடியான பேட்டிங்கால் இன்று உலக அளவில் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் இளம் இந்திய வீரர் ரிஷப் பண்ட் இந்தியாவின் வருங்கால கேப்டனாகக்கூடிய ஒருவராக அறியப்படுகிறார். அதற்கு காரணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்துபவராக இருக்கும் அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போது இருந்த சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத்துக்கு எதிரான ஒரு போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 150 ரன்களை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரராக களமிறங்கினார்.

அதில் முதல்முறையாக அதிரடியாக விளையாடிய அவர் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 69 (40) ரன்கள் விளாசி டெல்லியின் 8 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அன்றைய நாளில் வெறும் 18 வருடம் 212 நாட்கள் மட்டுமே நிரம்பி இருந்த அவர் இன்று அதே டெல்லி அணியின் கேப்டனாகும் அளவுக்கு வளர்ந்து நிற்பது பாராட்டுக்குரியதாகும்.

- Advertisement -

3. பிரிதிவி ஷா: கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டன் பிரித்வி ஷா அந்த வருட ஐபிஎல் தொடரில் அவரின் சொந்த மாநிலமான டெல்லி அணிக்கு விளையாடினார். அதிலும் கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டிய அவர் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 62 (44) ரன்கள் விளாச அவருடன் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 93* (40) ரன்கள் அடித்ததால் 20 ஓவர்களில் அந்த அணி 219/4 ரன்கள் குவித்தது.

அதை தொடர்ந்து சேசிங் செய்த கொல்கத்தா 164/9 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி பெற்றது. அன்றைய நாளில் வெறும் 18 வருடம் 169 நாட்களில் அரை சதமடித்த பிரித்திவி ஷா டெல்லியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதுடன் 2022இலும் அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கும் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

2. சஞ்சு சாம்சன்: கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். அந்த வகையில் 2013இல் முதல் முறையாக ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான அவர் பெங்களூருக்கு எதிரான தனது 2-வது போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 172 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 48/2 என ராஜஸ்தான் தடுமாறியபோது களமிறங்கினார்.

அப்போது 18 வயது 169 நாட்கள் மட்டுமே நிரம்பியிருந்த அவர் அதிரடியாக 7 பவுண்டரி 2 சிக்சருடன் 63 (41) ரன்கள் விளாசி ராஜஸ்தானின் 4 விக்கெட் வித்தியாச வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார். அதே சாம்சன் இன்று அதே ராஜஸ்தானுக்கு கேப்டனாவார் என்று யாரும் அந்நாளில் எதிர்பார்த்திருக்க முடியாது.

1. ரியன் பராக்: அசாமை சேர்ந்த இளம் வீரர் ரியன் பரக் அந்த மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பை தொடரில் அசத்தியதால் 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு விளையாட ஒப்பந்தமானார்.

அதில் டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் பேட்டிங்கில் திணறி 20 ஓவர்களில் 115/9 ரன்கள் மட்டுமே எடுத்து. அப்போட்டியில் ராஜஸ்தான் தோற்றாலும் தனி ஒருவனை போல 4 பவுண்டரி 2 சிக்சருடன் 50 (49) ரன்கள் எடுத்த ரியான் பராக் அன்றைய நாளில் 17 வருடம் 175 நாட்கள் மட்டுமே நிரம்பியிருந்ததால் ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -
Published by