சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக எம்எஸ் தோனி படைத்துள்ள 5 அற்புதமான உலக சாதனைகள்

Dhoni
- Advertisement -

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி அதன் தலைநகர் ராஞ்சியை உலக வரைபடத்தில் அடையாளப்படுத்தியவர் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மனதார பாராட்டியுள்ளார். அந்தளவுக்கு கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ராஞ்சியில் பிறந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி 2004இல் சௌரவ் கங்குலி தலைமையில் சர்வதேச அரங்கில் அறிமுகமான தோனி தனது அதிரடியான ஆட்டத்தால் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களை தோனிக்கு முன் தோனிக்கு பின் என 2 வகையாக பிரிக்கலாம்.

- Advertisement -

அந்தளவுக்கு அதிரடியாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாகவும் விளையாட வேண்டும் என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கினார். அதனாலேயே தற்போதைய இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் என்பது 2வது வேலையாகவும் அந்த இடத்தில் விளையாடும் வீரர் அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டும் என்பது முதல் வேலையாகவும் மாறியுள்ளது.

அப்படி மகத்தான விக்கெட் கீப்பராக வரலாற்றை மாற்றிய தோனி அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத போதிலும் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் இன்றைய இந்திய அணியில் விளையாடும் 70% வீரர்களை உருவாக்கி நல்ல தலைவனாக செயல்பட்ட அவர் அதிரடியான ஃபினிஷர் உட்பட நிறைய பரிணாமங்களை கொண்டவர்.

Dhoni-1

விக்கெட் கீப்பராக:
அவரையும் அவரது சாதனைகளையும் விவரிக்க ஒரு பதிவு போதாது என்றே சொல்லலாம். எனவே இந்த பதிவில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் படைத்துள்ள சில உலக சாதனைகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. மின்னல் வேகம்: சுழல் பந்து வீச்சாளர்களின் மாயாஜால சுழலால் ஏமாறும் பேட்ஸ்மேன்களை ஸ்டம்பிங் செய்வது விக்கெட் கீப்பர்களின் முதல் கடமையாகும். அதில் பல தருணங்களில் வெள்ளை கோட்டுக்கு வெளியேயோ அல்லது காற்றிலோ பேட்ஸ்மேன்கள் தங்களது காலை ஒரு இன்ச் எடுத்தால் கூட கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் தோனி செய்த ஸ்டம்ப்பிங்களை ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாது.

MS Dhoni Stumping

அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒரு போட்டியில் அதன் பேட்ஸ்மேன் கீமோ பாலை வெறும் 0.08 வினாடியில் ஸ்டம்பிங் செய்த தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற தனது சொந்த சாதனையை (0.09) முறியடித்து உலக சாதனை படைத்தார். அதே போல் திரும்பாமலேயே பந்தை பிடித்து ரன் அவுட் செய்தது, 2016 டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக முன்கூட்டியே ஒற்றை கையுறையை கழற்றி விட்டு ரன் அவுட் செய்து வெற்றி பெற வைத்தது போன்றவை விக்கெட் கீப்பிங்கில் அவர் ஏற்படுத்திய பரிணாமத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

- Advertisement -

2. அதிக ஸ்டம்பிங்: அந்த வகையிலேயே மொத்தமாக 538 போட்டிகளில் 195 ஸ்டம்பிங் செய்துள்ள தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். 2வது இடத்தில் இலங்கையின் குமார் சங்ககாரா 139 ஸ்டம்பிங்களுடன் உள்ளார்.

MSdhoni

இந்த வகையில் சங்ககாரா, கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர் போன்ற தரமான விக்கெட் கீப்பர்களை மிஞ்சிய தோனி வரலாற்றின் சிறந்த விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை வருங்காலங்களில் உடைப்பது அவ்வளவு சுலபமல்ல என்றே கூறலாம்.

- Advertisement -

3. அதிரடி பேட்டிங்: கடந்த 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் வெறித்தனமாக விளையாடிய தோனி 183 ரன்கள் விளாசினார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் குயின்டன் டீ காக் (178*) உள்ளார்.

dhoni3

4. ஜீரோ முதல் ஹீரோ: வங்கதேசத்துக்கு எதிரான தன்னுடைய அறிமுக போட்டியில் தோனி கோல்டன் டன் அவுட்டானதை யாரும் மறக்க முடியாது. ஆனால் அதற்காக மனம் தளராமல் அடுத்தடுத்த போட்டிகளில் அடித்து நொறுக்கிய அவர் 42 இன்னிங்ஸ்லேயே ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக நம்பர் ஒன் இடத்தை பிடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்தார்.

5. சிக்ஸர் கிங்: 2011 பைனல் உலகக் கோப்பை பினிஷிங் சிக்ஸர் உட்பட 359 சிக்சர்களை பறக்க விட்டுள்ள தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆடம் கில்கிறிஸ்ட் (259) உள்ளார்.

Dhoni

இதையும் படிங்க: வீடியோ : என்னையா டெஸ்ட் பிளேயர்னு ஒதுங்குனீங்க, அதிர்ஷ்ட சிக்ஸருடன் சம்பவம் செய்த ஸ்மித் – ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி

இந்திய அளவில் தற்போது 400 சிக்சர்களை கடந்து விட்ட ரோகித் சர்மா தொடக்க வீரராக பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக சிக்ஸர்களை அடிக்கிறார். ஆனால் தோனி அழுத்தமான மிடில் ஆர்டரில் இந்த சிக்ஸர்களை அடித்துள்ளது அவரது திறமைக்கு சான்றாகும்.

Advertisement