- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வரலாற்றின் மிகசிறந்த ஃபினிஷருக்கு அடையாளமாய் எம்எஸ் தோனி படைத்துள்ள 5 சாதனைகள்

கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர் எம்எஸ் தோனி 2004இல் சௌரவ் கங்குலி தலைமையில் அறிமுகமாகி இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கும் அளவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நிரந்தர இடத்தை பிடித்தார். அதை விட 2007இல் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் அணியை அற்புதமாக வழி நடத்தி டி20 உலக கோப்பையை வென்ற அவர் 2009/10இல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேற்றி 2011 உலக கோப்பையை வென்று 2013 சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்று சாதனை படைத்தார்.

அந்த வகையில் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் முதன்மையானவராக ஜொலிக்கும் அவர் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார். அப்படி பன்முக உங்களை கொண்ட தோனி ஆரம்ப காலங்களில் 3வது இடத்தில் விளையாடினாலும் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அணியின் நலனுக்காக தமது இடத்தை விராட் கோலி போன்ற இளம் வீரர்களுக்கு கொடுத்து விட்டு அழுத்தமான மிடில் ஆர்டரில் விளையாடினார்.

- Advertisement -

மிகசிறந்த பினிஷர்:
அதில் இந்தியா தோற்க வேண்டிய எத்தனையோ போட்டிகளில் நங்கூரமாக நின்று நேரம் செல்ல செல்ல அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவின் மிகச் சிறந்த பினிஷராக போற்றப்படுகிறார். உலகிலேயே ஃபினிஷிங் செய்யும் கலையை முதன் முதலாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவன் அறிமுகப்படுத்தினார். ஆனால் அதை கிட்டத்தட்ட பெரும்பாலான போட்டிகளில் 5, 6, 7 ஆகிய இடங்களில் களமிறங்கி சரிந்த இந்தியாவை ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி தூக்கி நிறுத்தி வெற்றிகளை பெற்று கொடுத்த தோனி பினிஷிங் கலையை உலகம் முழுவதிலும் பிரபலமாக்கியவர் என்றாலும் மிகையாகாது.

அவரது பல அபாரமான ஃபினிஷிங் போட்டிகளை பார்த்து இன்று உலகம் முழுவதிலும் மிடில் ஆர்டர் விளையாடும் இளம் பேட்ஸ்மேன்கள் மைக்கேல் பெவன் போல் வரவேண்டும் என்பதை விட தோனி போல் வரவேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுவது அதற்கு சான்றாகும். அதை விட சச்சின் டெண்டுல்கர் அவுட்டானால் போட்டி முடிந்ததாக தொலைக்காட்சியை ஆஃப் செய்த ரசிகர்கள் தோனி களத்தில் நிற்கும் கடைசி பந்து வரை வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பார்ப்பதே அதற்கு உணர்வுபூர்வமான சான்றாகும். அதை வாய் வார்த்தை மட்டும் பார்க்காமல் புள்ளி விவரங்கள் அடிப்படையிலும் பார்ப்போம் வாங்க:

- Advertisement -

1. நாட் அவுட் நாயகன்: கடைசி வரை நின்று போட்டியை வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் என்பதே பினிஷர் என்பதற்கு அர்த்தமாகும். அந்த வகையில் 84 போட்டியில் அவுட்டாகாமல் இருந்துள்ள தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை அவுட்டாகாமல் இருந்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் (72) உள்ளார்.

அந்த 84 போட்டிகளில் 51 போட்டிகளில் சேசிங் செய்யும் போது தோனி அவுட்டாகாமல் இருந்தார். ஆச்சரியப்படும் வகையில் அதில் 47 போட்டியில் இந்தியா வென்றுள்ளது. 2 போட்டிகளில் மட்டுமே தோற்றது. 2 போட்டிகள் சமனில் முடிந்தது என்பதே அவர் மிகச்சிறந்த பினிஷர் என்று நிரூபிக்க போதுமானது.

- Advertisement -

2. மிடில் ஆர்டர் நாயகன்: மேலும் 6வது அல்லது அதற்கு கீழே களமிறங்கி 10628 ரன்களை குவித்துள்ள தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 6வது இடத்துக்கு கீழ் களமிறங்கி 10000 ரன்கள் மற்றும் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (9365) உள்ளார்.

3. 10000 நாயகன்: தனது கேரியரில் பெரும்பாலும் மிடில் ஆடரில் விளையாடிய தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் 50+ பேட்டிங் சராசரியுடன் 10000 ரன்களைக் கடந்த முதல் வீரராக உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு முன் சச்சின் டெண்டுல்கர் உட்பட நிறைய வீரர்கள் 10000 ரன்களை தொடும் போது 50க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தனர்.

- Advertisement -

4. டெயில் எண்டெருடன்: பொதுவாக கிரிக்கெட்டில் டெயில் என்டர்களுடன் பேட்டிங் செய்து வெற்றி பெற வைப்பது தனி கலை என்பார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக கடந்து 2017ஆம் ஆண்டு பல்லலேகே நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை நிர்ணயித்த 231 ரன்களை துரத்தும் போது 131/7 என சரிந்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது.

அப்போது புவனேஸ்வர் குமாருடன் (53* ரன்கள்) சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்த தோனி (45* ரன்கள்) ஒருநாள் கிரிக்கெட்டில் 8வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட விராட் கோலி – ரோஹித் எத்தனையாவது இடம் தெரியுமா?

5. 7இல் சதம்: ஒருநாள் கிரிக்கெட்டில் 7வது இடத்தில் களமிறங்கி 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் தோனி படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சமீபத்தில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் 2 சதங்களை அடித்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

- Advertisement -
Published by