ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் விளாசிய டாப் 5 வெளிநாட்டு நட்சத்திர பேட்ஸ்மேன்கள்

Warner
- Advertisement -

பொதுவாகவே இந்தியர்களுக்கு வெளிநாட்டினரின் மீதும் வெளிநாட்டு சரக்குகள் மீதும் ஒரு தனிப் பிரியம் இருப்பதை பல தருணங்களில் பார்க்கிறோம். அந்த வகையில் ஐபிஎல் டி20 தொடரில் எப்போதுமே இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு ஈடாக அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்யும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களையும் ரசிகர்கள் கொண்டாட தவறுவதில்லை. அதிலும் ஒரு போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்ற நிலைமையில் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு அணிக்கு எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள் என்பதையும் ரசிகர்கள் கவனிக்காமல் இருக்கவே மாட்டார்கள். அதற்கேற்றார் போல் பல தருணங்களில் இந்திய பேட்ஸ்மேன்களை மிஞ்சும் அளவுக்கு கிறிஸ் கெயில், மேத்தியூ ஹெய்டன் போன்ற சீமை சரக்குகளான வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் தங்களது அபார திறமையால் தங்களது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளனர்.

அதிலும் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவிலியர்ஸ்க்கு இந்தியாவில் விராட் கோலிக்கு ஈடாக ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு பல வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் எல்லா சீசன்களிலும் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் பவுலர்களுக்கும் எதிரணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து சீசன் முழுவதும் ரன் மழை பொழிந்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த டாப் பேட்ஸ்மேன்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

5. கிறிஸ் கெயில் 708: 2013 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் சூறாவளியாக புயலை போல் சுழன்றடித்து ரன் மழை பொழிந்தார். அந்த சீசனில் தான் அவரை முதல் முறையாக அனைவரும் கெயில் புயல் என அழைக்கத் தொடங்கினர். ஏனெனில் புனேக்கு எதிரான போட்டியில் 13 பவுண்டரி 17 சிக்சருடன் வெறும் 66 பந்துகளில் 175* ரன்கள் விளாசி ஐபிஎல் மட்டுமல்லாது ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பேட்ஸ்மேனாக படைத்த சாதனையை யாரும் மறக்க முடியாது.

அந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 4 அரைசதங்கள் 1 சதம் உட்பட மொத்தம் 708 ரன்களை 59.00 என்ற சராசரியில் 156.29 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார். அதில் 57 பவுண்டரிகளும் 51 இமாலய சிக்ஸர்களும் அடங்கும்.

- Advertisement -

4. மைக் ஹசி 733: அதே 2013 சீசனில் கெயில் அதிரடியாக ரன் மழை பொழிந்தார் என்றால் ஆஸ்திரேலியாவின் மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் ஜாம்பவான் மைக் ஹஸ்ஸி தனது கிளாஸ் நிறைந்த பேட்டிங்கால் ரன் மழை பொழிந்து தாம் விளையாடிய சென்னையை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அந்த சீசனில் சதம் அடிக்கவில்லை என்றாலும் கூட 6 சதங்களை 129.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அவர் மொத்தமாக 17 போட்டிகளில் 733 ரன்களை 52.35 என்ற சூப்பரான சராசரியில் குவித்தார்.

Hussey Brothers

அந்த வருட இறுதிப் போட்டியில் மும்பையிடம் சென்னை தோல்வியடைந்தாலும் 81 பவுண்டரிகளையும் 17 சிக்சர்களையும் பறக்க விட்ட அவர் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார். அதிகபட்ச ஸ்கோர் : 95.

- Advertisement -

3. கிறிஸ் கெயில் 733: 2009 – 2010 வரை கொல்கத்தாவில் விளையாடிய கிறிஸ் கெயில் 2011இல் பெங்களூருவுக்காக விளையாடிய முதல் வருடத்திலேயே 608 ரன்கள் குவித்து அசத்தினார். அதற்கடுத்த 2012 ஐபிஎல் சீசனில் ஒரு படி மேலே சென்ற அவர் 7 அரைசதங்கள் 1 சதங்கள் உட்பட 733 ரன்களை 61.08 என்ற அபாரமான சராசரியில் 160.74 என்ற அனல் பறக்கும் ஸ்டிரைக் ரேட்டில் விளாசி அந்த வருடத்திற்கான ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார்.

Gayle 1

மேலும் 46 பவுண்டரிகளையும் 59 சிக்சர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்த அவர் இந்தப் பட்டியலில் மீண்டும் 3-வது இடம் பிடிக்கிறார். அதிகபட்ச ஸ்கோர் : 128*

- Advertisement -

2. கேன் வில்லியம்சன் 735: இந்த வருட ஐபிஎல் தொடரில் காயத்திலிருந்து குணமடைந்து சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 100க்கும் கீழான ஸ்டிரைக் ரேட்டில் மோசமாக விளையாடிய நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால் 2018இல் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய வழக்கில் தடை பெற்றதால் ஹைதராபாத் அணியை முதல் முறையாக வழிநடத்திய அவர் அந்தப் பொறுப்பை தலைமீது வைத்து அணியை சிறப்பாக வழி நடத்தினார்.

kane

மேலும் பேட்டிங்கில் சதம் அடிக்கவில்லை என்றாலும் 8 அரை சதங்கள் உட்பட 17 போட்டிகளில் 735 ரன்களை 52.50 என்ற சராசரியில் 142.44 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து அசத்தினார். அதிகபட்ச ஸ்கோராக 84 ரன்களை பதிவு செய்த அவர் 64 பவுண்டரிகளையும் 28 சிக்ஸர்களையும் பறக்க விட்டு அந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் பைனல் வரை முன்னேறிய ஹைதராபாத் சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் அதிரடியில் தோற்றது.

1. டேவிட் வார்னர் 848: 2016 ஐபிஎல் தொடரில் 973 ரன்கள் குவித்த விராட் கோலிக்கு போட்டியாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் பேட்டிங்கில் அனலாக செயல்பட்டு 17 போட்டிகளில் 848 ரன்களை 60.57 என்ற அற்புதமான சராசரியில் 151.42 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதன்பின் நடைபெற்ற இறுதிப் போட்டியில் விராட் கோலியின் பெங்களூருவை வெறும் 8 ரன்களில் தோற்கடித்து ஹைதராபாத்துக்கு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தார்.

Warner

அந்த வருடம் 88 பவுண்டரிகளையும் 31 சிக்சரை பறக்க விட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆரஞ்சு தொப்பி (3) வென்ற வீரர், அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் போன்ற சாதனைகளை படைத்த போதிலும் கடந்த வருடம் அவரை ஹைதராபாத் அணி நிர்வாகம் கழற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement