
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
எனவே அவர்களுடைய ஆட்டத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 4 இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.
1. ரோஹித் சர்மா: ஹிட்மேன் என்று ரசிகர்களால் புகழப்படும் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் அட்டகாசமாக விளையாடி இதுவரை 990 ரன்கள் அடித்துள்ளார்.
சவாலான ஆஸ்திரேலியாவில் 4 சதங்கள் 2 அரை சதங்கள் அடித்துள்ள அவர் 58.23 என்ற அபாரமான சராசரியில் 990 ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
2. விராட் கோலி: ஆஸ்திரேலியாவை 2வது தாயகம் என்று சொல்லும் அளவுக்கு விராட் கோலி அந்நாட்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக விளையாடியுள்ளார்.
குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அவர் 47.17 என்ற நல்ல சராசரியில் 802 ரன்களை அடித்து இப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். அதில் 3 சதங்கள் 4 அரை சதங்களும் அடங்கும்.
3. சச்சின் டெண்டுல்கர்: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ள ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் 740 ரன்கள் எடுத்துள்ளார்.
அதை 30.83 என்ற சராசரியில் குவித்துள்ள சச்சின் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம், 5 அரை சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். அதிலும் 2008 சிபி கோப்பை முத்தரப்பு தொடரில் அவர் அடித்த சதத்தை மறக்க முடியாது.
4. எம்எஸ் தோனி: இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக அறியப்படும் தோனி ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் சதத்தை அடித்ததில்லை.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு டபுள் டிலைட்.. ஸ்பெஷல் ஐசிசி விருதை மொத்தமாக வென்ற அபிஷேக் சர்மா – ஸ்மிரிதி மந்தனா
பெரும்பாலும் லோயர் ஆர்டரில் விளையாடிய காரணத்தால் அவர் ஆஸ்திரேலியாவில் 4 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். கூடவே 684 ரன்களை 45.60 என்ற சராசரியில் குவித்துள்ள அவர் இப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். குறிப்பாக 2019 ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் அரை சதமடித்த அவர் ஆஸ்திரேலியாவில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றதை மறக்க முடியாது.