
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. 1984ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை 2016, 2022 ஆகிய வருடங்களில் டி20 வடிவத்தில் நடைபெற்றது.
அதில் 2016 ஆசியக் கோப்பையை தோனி தலைமையில் இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் ஆசிய கோப்பையின் டி20 ஃபார்மட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.
1. விராட் கோலி: இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி 2014, 2016 ஆகிய அடுத்தடுத்த டி20 உலகக் கோப்பைகளின் தொடர்நாயகன் விருது வென்று சாதனை படைத்தவர்.
2016 – 2019 காலகட்டங்களில் உச்சகட்ட ஃபார்மில் இருந்த அவர் 2022 ஆசிய கோப்பையில் ஃபார்மின்றி தவித்தார். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தடுமாறிய அவரை பலரும் ஓய்வு பெறுமாறு விமர்சித்தனர். இருப்பினும் அதற்கெல்லாம் அசராத 2022 ஆசியக் கோப்பையில் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பி தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார்.
அந்த வகையில் ஆசிய கோப்பையில் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 429 ரன்களை 85.80 சராசரியில் குவித்துள்ளார். அதில் 3 அரை சதம் ஒரு சதம் அடங்கும். அதன் வாயிலாக ஆசியக் கோப்பை டி20 தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
2. முகமது ரிஸ்வான்: பாகிஸ்தானை சேர்ந்த இவர் 6 போட்டிகளில் 281 ரன்களை 56.20 சராசரியில் எடுத்து இப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். சமீப காலங்களில் மோசமாக விளையாடியதால் இம்முறை அவர் ஆசியக் கோப்பையில் விளையாடத் தேர்வாகவில்லை. எனவே இந்த சாதனைப் பட்டியலில் விராட் கோலியை மற்றவர்கள் எளிதில் தொட முடியாது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: அடுத்த 2026 சீசனில் ஆயுஷ் மாத்ரே, டேவால்டு பிரேவிஸ் ஆகியோர் விளையாடுவார்களா? – ருதுராஜ் அளித்த பதில்
3. ரோஹித் சர்மா: 2024 டி20 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற ரோஹித் சர்மா ஆசிய கோப்பையில் 9 டி20 போட்டிகளில் விளையாடுகிறார். அதில் 271 ரன்களை 30.11 என்ற சராசரியில் குவித்துள்ள அவர் 2 அரை சதங்கள் அடித்துள்ளார். இவரும் ஓய்வு காரணமாக இம்முறை விளையாடப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.