10 கோடிக்கும் மேல் ஏலம் போகி இந்த ஐ.பி.எல் தொடரில் சொதப்பி வரும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Jamieson-1

ஐபிஎல் 14வது சீசன் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 18 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் போதும் குறைவான தொகைக்கு ஏலம் போன இளம் வீரர்கள் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க, அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களோ எதுக்கு இவர்களை ஏலத்தில் எடுத்தோம் என்று அணி நிர்வாகம் தலையில் கைவைக்கும் அளவிற்கு விளையாடி வருவார்கள். இந்த ஆண்டும் அப்படி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சொதப்பி வரும் வீரர்களைப் பார்ப்போம்.

richardson

ஜை ரிச்சார்ட்சன் :

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது பெங்களூர் அணி நிர்வாகத்துடன் போட்டி போட்டுக்கொண்டு இவரை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. ஆஸ்திரேலிய வீரர்கள் என்றாலே பஞ்சாப் அணிக்கு ஒரு தனி அக்கரைதான். அந்த அக்கரையில் இந்த ஆஸ்திரேலிய வலது கை பாஸ்ட் பௌலரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. ஆனால் ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோரைத் தவிர மற்ற எந்த ஆஸ்திரேலிய வீரர்களும் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பெரிதாக உதவியது இல்லை. ரிச்சார்ட்சனும் அதை கச்சிதமாக செய்து வருகிறார்.

பஞ்சாப் அணி இத்தொடரில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் மூன்று போட்டிகளிலும் எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கினார் ஜை ரிச்சர்ட்சன். எனவே 4வது போட்டியில் இவரை விளையாடப்போகும் அணியில் இருந்து எடுத்தது பஞ்சாப் அணி. இந்த தொடரில் இவர் சராசரியாக ஒரு ஓவருக்கு 10.64 ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கி 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

meredith

- Advertisement -

ரிலே மெரிடித்:

இவர் பஞ்சாப் அணிக்கு மோசம் செய்த இன்னொரு ஆஸ்திரேலிய பாஸ்ட் பவுலர் ஆவார். இவரை ஏலத்தின் போது எட்டு கோடி ரூபாய்க்கு எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. அணியில் உள்ள மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கையில் ஏலத்தில் எடுத்த இவர், பஞ்சாப் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடினார். இந்த மூன்று போட்டிகளிலும் தனது திறமையை நிரூபிக்க தவறிய மெரிடித், 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி , சராசரியாக ஒரு ஓவருக்கு 10.50 ரன்களை எதிரனிக்கு விட்டுக்கொடுத்தார். எனவே இவரையும் 4வது போட்டியிலிருந்து தூக்கியது பஞ்சாப் அணி.

jamieson

கைல் ஜேமிசன் :

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அந்த அணியின் இளம் வீரர்களான முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். ஆனால் 15 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்த கைல் ஜேமிசன் அந்த அணிக்கு உபத்திரமாக இருந்து வருகிறார். நியூசிலாந்து நாட்டின் ஆல்ரவுண்டரான இவர் 3 போட்டிகளில் பந்துவீசி 9.80 சராசரியில் பந்துவீசி 3 விக்கெட்களையும், பேட்டிங்கில் 27 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இருந்தாலும் பெங்களூர் அணியின் கேப்டன் கோலிக்கு இவர் மீது இன்னும் நம்பிக்கை இருப்பதால் தொடர்ந்து இவரை அணிக்குள் எடுத்து வருகிறார்.