IND vs NZ : முக்கிய நேரத்தில் வந்து இந்தியாவை துவம்சம் செய்த டாம் லாதம் – 23 வருட சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை

tom Latham IND vs NZ
- Advertisement -

நியூசிலாந்துக்கு பயணித்து முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் வென்ற இளம் இந்திய அணி அடுத்ததாக சிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதியன்று ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 306/7 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் கேப்டன் ஷிகர் தவான் 72 (77) ரன்களும் சுப்மன் கில் 50 (65) ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 80 (76) ரன்களும் எடுத்தனர். கடைசியில் யாருமே எதிர்பாராத வகையில் வாஷிங்டன் சுந்தர் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 37* (16) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதீ மற்றும் லாக்கி பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 307 ரன்களை துரத்திய நியூஸிலாந்துக்கு ஃபின் ஆலன் 22, டேவோன் கான்வே 24, டார்ல் மிட்சேல் 11 என முக்கிய வீரர்கள் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 88/3 என தடுமாற்றத் தொடக்கத்தை பெற்றது.

- Advertisement -

அபார சாதனைகள்:
ஆனால் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 221 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய கேன் வில்லியம்சன் 94* (98) ரன்களும் டாம் லாதம் சதமடித்து 19 பவுண்டரி 5 சிக்ஸருடன் 145* (104) ரன்களும் விளாசி 47.1 ஓவரிலேயே 309/3 ரன்களை குவிக்க வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் 1 – 0* (3) என ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

மறுபுறம் 306 ரன்கள் குவித்தும் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை எடுத்தும் கடைசி நேரத்தில் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியா பரிதாபத் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு 145* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய டாம் லாதம் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஏனெனில் 88/3 என்ற அழுத்தமான நிலைமையில் களமிறங்கி கேப்டன் வில்லியம்சனுடன் நங்கூரமாக நின்ற அவர் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் ரன்களை சேர்த்து இந்திய ரசிகர்களே பாராட்டும் வகையில் அட்டகாசமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

கடந்த 2012 முதல் நியூசிலாந்தின் முக்கிய வீரராக செயல்பட்டு வரும் அவர் சமீப காலங்களில் வில்லியம்சன் காயமடைந்த வேளையில் கேப்டனாகவும் செயல்பட்ட பெருமைக்குரியவர். அதனால் நியூசிலாந்தின் அடுத்த கேப்டன் என்று கருதப்படும் அவர் இப்போட்டியில் 145* ரன்களை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அசத்தினார்.

1. அதை விட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் என்ற நாதன் அஸ்லேவின் 32 வருட சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1999ஆம் ஆண்டு ராஜ்கோட் மைதானத்தில் முன்னாள் வீரர் நாதன் ஆஸ்லே 120 ரன்கள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

2. அத்துடன் வெறும் 79 பந்துகளில் சதமடித்த அவர் இப்போட்டி நடைபெற்ற ஈடன் பார்க் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த பேட்ஸ்மேன் என்ற இலங்கையின் சனாத் ஜெயசூர்யா சாதனையையும் சமன் செய்தார். இதற்கு முன் கடந்த 2001ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஜெயசூர்யாவும் 79 பந்துகளில் சதமடித்துள்ளார்.

3. அது போக வில்லியம்சனுடன் 221* ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த நியூசிலாந்து ஜோடியாக வரலாறு சாதனை படைத்தார். முந்தைய சாதனை : டாம் லாதம் – ராஸ் டெய்லர் : 200 ரன்கள், மும்பை, 2017.

4. மேலும் ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 4வது விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடியாகவும் சாதனையும் படைத்தார். முந்தைய சாதனை : முகமத் யூசுப் – சோயப் மாலிக் : 206 ரன்கள், செஞ்சூரியன், 2009.

5. இவை அனைத்தையும் விட 5வது இடத்தில் களமிறங்கி 145* ரன்களை குவித்து வெற்றி பெற வைத்த அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 5வது அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. டாம் லாதம் : 145*, இந்தியாவுக்கு எதிராக, 2022*
2. சிக்கந்தர் ராசா : 135*, வங்கதேசத்துக்கு எதிராக, 2022
3. மைக்கேல் ப்ரெஸ்வேல் : 127*, அயர்லாந்துக்கு எதிராக, 2022
4. இயன் மோர்கன் : 124*, அயர்லாந்துக்கு எதிராக, 2013

Advertisement