அடி வாங்கிய பின்.. அந்த 2 இந்திய வீரர்களை பாத்து 7 விக்கெட்ஸ் எடுத்தேன்.. டாம் ஹார்ட்லி பேட்டி

Tom Hartley
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நிறைவு பெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த உதவியுடன் 246 ரன்கள் குவித்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் 80, கே.எல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுத்த உதவியுடன் 436 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்கள் எடுத்தார்.

- Advertisement -

2வது இன்னிங்ஸில் கத்துக்கிட்டேன்:
அப்போது 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஓலி போப் 196 ரன்கள் குவித்து 420 ரன்கள் எடுக்க உதவினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் சாய்ந்தார். இறுதியில் 231 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியா சுழலுக்கு சாதகமாக மாறிய ஹைதராபாத் பிட்ச்சில் 4வது நாளில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் பரத் தலா 28 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 7 விக்கெட் எடுத்தார். முன்னதாக இந்த போட்டியில் அறிமுகமான டாம் ஹார்ட்லி முதல் இன்னிங்ஸில் 131 ரன்களை வாரி வழங்கி வெறும் 2 விக்கெட்களை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார். ஆனால் 2வது இன்னிங்ஸில் அப்படியே நேர்மாறாக 62 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 7 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

இந்நிலையில் 2வது இன்னிங்சில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை பார்த்து தன்னுடைய பந்து வீச்சில் மாற்றம் செய்தது 7 விக்கெட்டுகள் எடுக்க உதவியதாக டாம் ஹார்ட்லி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச்சில் அதிக உதவி இருந்ததாக எனக்கு தோன்றவில்லை. அதனால் முதல் இன்னிங்ஸ் மிகவும் கடினமாக அமைந்தது. அது எதிர்பார்த்தது போல் சுழலவில்லை”

இதையும் படிங்க: 100% பெஸ்ட்.. சின்ன மாற்றம் தான் செஞ்சேன்.. இந்தியா அதிர்ஷ்டத்தை கொடுத்துருச்சு.. போப் பேட்டி

“இருப்பினும் ஸ்டோக்ஸ், மெக்கலம் மற்றும் அணி நிர்வாகத்திடம் பேசினேன். எங்களுடைய அணி நிர்வாகத்தின் சூழல் சிறப்பாக இருக்கிறது. இன்று ஸ்டோக்ஸ் வழியில் பந்து வீசி மேலே வந்தேன். முதல் இன்னிங்ஸில் நான் சிறப்பாக பந்து வீசவில்லை. அப்போது அஸ்வின் மற்றும் ஜடேஜாவை பார்த்தேன். அவர்களைப் பார்த்த பின் நான் வேகமாக பந்து வீசக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் பின் என்னுடைய லென்த்தை அட்ஜஸ்ட் செய்தேன்” என்று கூறினார்.

Advertisement