11வது ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. மும்பை-சென்னை அணிகளுக்கான பரபரப்பான போட்டியில் சென்னை அணி கேதார் ஜாதவ் சிக்ஸர் மற்றும் பவுண்டரியால் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தனது இரண்டாவது லீக்கில் வலுவான கொல்கத்தா அணியை எதிர்கொள்கின்றது.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தோனி தலைமையிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக் தலைமையிலும் களம் இறங்குகின்றன. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்ஸ் இரண்டு முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளன.
சமபலம் வாய்ந்த இரண்டு அணிகளிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திடும் வீரர்கள் உள்ளனர். அதேநேரம் பேட்ஸ்மேன்களை தினறடிக்க செய்யும் பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.ஆனாலும் சென்னை அணியில் தற்போது காயம் காரணமாக முக்கிய வீரர்கள் சிலர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடிட முடியாத இக்கட்டான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
மும்பைக்கு எதிரான முதல் போட்டியின்போது கேதார் ஜாதவ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டயர்டு ஆகி பாதியில் வெளியேறினார். பின்னர் கைவvசvம் சென்னை அணியிடம் வேறு விக்கெட்டுகள் இல்லாததால் கடைசியில் இறங்கி ஆடினார்.இந்நிலையில் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சிலவாரங்கள் கேதார் ஜாதவிற்கு ஓய்வு தேவை என்பதால் அவர் இந்த தொடரில் இனி விளையாடுவது சந்தேகமே என சென்னை அணி தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மற்றொரு முக்கிய அதிரடி வீரரான டூப்ளெசிஸ் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவரும் இன்றைய போட்டியில் பங்கேற்பாரா என்பது இதுவரையிலும் தெரியவில்லை.சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜயும் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. அவர் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
காயம் காரணமாக வீரர்கள் அவதிப்பட்டாலும் அனைவரும் விரைவில் அணிக்கு திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது சென்னை அணி நிர்வாகம்.இன்றைய போட்டியில் அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா மற்றும் பிராவோ ஆகியோர் அதிரடி காட்ட அதிக வாய்ப்புள்ளது.இரண்டாடுகளுக்கு பின்னர் சென்னை அணி தனது சொந்த மண்ணில் பல்வேறு இடர்களுக்கு இடையில் இன்றைய போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்களிடையே பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.