
ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் சௌராஷ்ட்ராவை வீழ்த்திய தமிழ்நாடு தங்களுடைய 2வது போட்டியில் டெல்லியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. அப்போட்டி அக்டோபர் 18ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் தொடங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சாய் சுதர்சன் – ஜெகதீசன் ஆகியோர் 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதில் ஜெகதீசன் 65 ரன்கள் குவித்து அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சாய் சுதர்சன் சதமடித்தார்.
அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய பங்கிற்கு சுமாராக பந்து வீசிய டெல்லி பவுலர்களை நங்கூரமாக எதிர்கொண்டார். நேரம் செல்ல செல்ல சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் 150 ரன்கள் கடந்தும் சாய் சுதர்சன் அவுட்டாகாமல் அடம் பிடித்தார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய அவர் தம்முடைய கேரியரிலேயே முதல் முறையாக இரட்டை சதமடித்தார்.
இறுதியில் 2வது விக்கெட்டுக்கு 232 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லிக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த அவர் 25 பவுண்டரி 1 சிக்ஸருடன் 213 (274) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய பங்கிற்கும் சதமடித்து அசத்தினார். அடுத்ததாக வந்த பாபா இந்திரஜித் 16 ரன்களில் அவுட்டானார்.
அவருக்குப் பின் வந்த ரஞ்சன் பிரதோஷ் பாலுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வாஷிங்டன் சுந்தர் ஒரு வழியாக 19 பவுண்டரி 1 சிக்ஸருடன் 152 ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த ஷாருக்கான் அதிரடியாக விளையாடி 23 (13) ரன்களில் அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தமது பங்கிற்கு டெல்லி பவுலர்களைப் பந்தாடிய பிரதோஷ் பால் சதமடித்து 117 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இதையும் படிங்க: வெறும் 107 ரன்ஸ்.. சொதப்பிய ராகுல் லோயர் ஆர்டர்.. நியூஸிலாந்தை தடுத்து இந்தியாவை மழை காப்பாற்றுமா?
இறுதியில் ஆண்ட்ரே சித்தார்த் 66* ரன்கள் எடுத்ததால் தமிழ்நாடு 674-6 ரன்கள் குவித்து வலுவான நிலையை பெற்றது. அப்போது தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக தமிழ்நாடு கேப்டன் ஜெகதீசன் அறிவித்தார். டெல்லி சார்பில் அதிகபட்சமாக ஹிமான்சு சௌஹான் 2, நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து விளையாடும் டெல்லி இரண்டாவது நாள் முடிவில் 43-0 ரன்கள் எடுத்துள்ளது. தற்சமயத்தில் இந்தப் போட்டியில் 673 ரன்களுக்குள் டெல்லியை சுருட்டி முன்னிலை பெற்றாலே தமிழ்நாடு வெற்றிக்கான புள்ளிகளை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.