பெங்களூருவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46க்கு ஆல் அவுட்டாகி சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்து டேவோன் கான்வே 91, ரவீந்திரா 134 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 52, ஜெய்ஸ்வால் 35 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து சர்பராஸ் கானுடன் சேர்ந்து 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி முடிந்தளவுக்கு போராடி 70 ரன்களில் அவுட்டானார். அதன் பின் ரிஷப் பண்ட் – சர்பராஸ் ஜோடி சேர்ந்து நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்தனர்.
சொதப்பிய லோயர் ஆர்டர்:
அந்த வகையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியாவை 400 ரன்கள் தாண்ட வைத்து முன்னிலையும் பெற்றுக் கொடுத்தது. அதில் சர்பராஸ் கான் தனது முதல் சதத்தை அடித்து இந்தியாவை காப்பாற்றி 150 ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் துரதிஷ்டவசமாக 99 ரன்களில் அவுட்டாகி சதத்தை நழுவ விட்டு ஏமாற்றமாக பெவிலியன் திரும்பினார்.
ஆனால் அடுத்ததாக வந்த கே.எல் ராகுல் 12, ரவீந்திர ஜடேஜா 5, ரவிச்சந்திரன் அஸ்வின் 15 ஆகிய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 408/3 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியாவை 462 ரன்களுக்கு சுருட்டிய நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 3, வில்லியம் ஓரோர்க்கே 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மழை காப்பாற்றுமா:
ஒருவேளை ராகுல் உள்ளிட்ட லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி இன்னும் 50 – 100 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியா இப்போட்டியில் 200+ ரன்களை இலக்காக நிர்ணயத்திருக்கும். அதனால் வெற்றியும் கிட்டத்தட்ட உறுதியாக கிடைத்திருக்கும். அதை செய்யத் தவறியதால் இப்போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை 90% இழந்துள்ளது என்றே சொல்லலாம். தற்சமயத்தில் 107 ரன்களை துரத்தும் நியூசிலாந்து 0-0 என்ற நிலையில் இருந்த போது மழை வந்தது.
இதையும் படிங்க: 99 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் சச்சின், டிராவிடுக்கு அடுத்து 3 ஆவது இடத்தை பிடித்த – ரிஷப் பண்ட்
அதனால் நான்காவது நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில் நாளைய 5வது நாளில் பெங்களூருவில் 90% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. எனவே நியூசிலாந்துக்கு பிரகாசமாகியுள்ள வெற்றியைத் தடுத்து இப்போட்டியில் தோல்வியிலிருந்து இந்தியாவை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



