பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 46 ரன்களையும் நியூசிலாந்து அணி 402 ரன்களையும் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்சிலேயே 356 ரன்கள் பின்தங்கியது.
ரிஷப் பண்ட் பரிதாப சாதனை :
அதனை தொடர்ந்து இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்று அனைவரும் பயந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஒரு கட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் விளையாடிய விதம் இந்திய அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது.
ஆனால் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் சர்ஃபராஸ் கான் 150 ரன்களில் வெளியேற அதன்பிறகு சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்டும் 99 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த பிறகு இந்திய அணி மீண்டும் சரிவை நோக்கி சென்றுள்ளது.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களுக்கு ஆட்டம் இழந்துள்ளது. இதன் காரணமாக 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாட இருக்கிறது. நாளைய ஐந்தாம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடைபெற இருக்கும் வேளையில் இந்திய அணி இந்த 106 ரன்களுக்குள் அவர்களை சுருட்டியாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் 105 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பரிதாபமான சாதனைக்கு ஆளாகியுள்ளார். அதாவது இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 90 ரன்களுக்கு மேல் அடித்து ஏழு முறை ஆட்டமிழந்துள்ளார்.
இதையும் படிங்க : நான் தான் அஷ்வின் இடத்தை பிடிக்கப்போறேன்.. சாதித்து காட்டிய வாஷிங்டன் சுந்தர் – தரமான சம்பவம்
இதேபோன்று இந்திய அணிக்காக 90 ரன்கள் கடந்து அதிக முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டமிழந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 10 முறையும், டிராவிட் 9 முறையும் ஆட்டமிழந்து முதலிரண்டு இடங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து இந்த பட்டியலில் அதிகமுறை 90+ ரன்களில் ஆட்டமிழந்த வீரராக தற்போது ரிஷப் பண்ட் மூன்றாவது வீரராக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



