ஐபிஎல் 2022 : தமிழக வீரருக்கு நேரடியாக பயிற்சி கொடுத்த சச்சின் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே மிரட்டல்

- Advertisement -

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் வீரராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கி விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ள இந்த தொடர் வரும் மே 29-ஆம் தேதிவரை மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் 5 முறை கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் சொந்த மண்ணான மும்பையில் விளையாடும் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தின் தனது முதல் லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடி அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.

- Advertisement -

கலக்கிய முருகன் அஷ்வின்:
ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 177/5 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆரம்பம் முதல் நங்கூரமாக பேட்டிங் செய்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த இளம் வீரர் இஷான் கிசான் 48 பந்துகளில் 81* ரன்கள் விளாசினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடைசி நேரத்தில் லலித் யாதவ் 48* (38) ரன்கள் மற்றும் அக்சர் படேல் 38* (17) ரன்கள் எடுத்ததால் த்ரில் வெற்றி பெற்றது. மும்பை சார்பில் பந்துவீச்சில் கலக்கிய பேசில் தம்பி 3 விக்கெட்டுகளும் தமிழக வீரர் முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

சச்சினிடம் தொப்பி வாங்கிய முருகன் அஷ்வின்:
டெல்லிக்கு எதிரான இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் முருகன் அஷ்வின் விளையாடினார். குறிப்பாக இந்த போட்டித் துவங்குவதற்கு முன்பாக அவரின் மும்பை இந்தியன்ஸ் அணி தொப்பியை இந்தியாவின் மகத்தான ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வழங்கினார்.

- Advertisement -

அந்த தருணத்தைப் பற்றி போட்டி முடிந்த பின் முருகன் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “மும்பை அணிக்காக விளையாடுவதில் மிக மிக மகிழ்ச்சி. நான் அந்த அணியின் ஒரு மிகப்பெரிய ரசிகன். அப்படிப்பட்ட நிலையில் எனது முதல் மும்பை தொப்பியை சச்சின் சாரிடம் இருந்து பெறுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதைவிட போட்டிக்கு முன்பாக அவரை சந்தித்த நான் மும்பையில் டிஒய் பாட்டில் மற்றும் ப்ராபோர்ன் ஆகிய மைதானங்களில் உள்ள பிட்ச் பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன். ஏனெனில் நான் இங்கு அதிகம் விளையாடியது கிடையாது. எனவே அவரின் ஆலோசனைகள் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது” என கூறினார்.

மிரட்டிய அஷ்வின்:
முதல் போட்டியிலேயே ஜாம்பவான் சச்சினிடம் தொப்பியை பெற்ற முருகன் அஷ்வின் அவரிடமிருந்து மும்பை மைதானங்களை பற்றி முக்கியமான ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் பெற்றார். அதை அப்படியே டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் பயன்படுத்திய அவர் 4 ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி வெறும் 14 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை 3.50 என்ற மிகத்துல்லியமான எக்கனாமியில் எடுத்தார். இது டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட இதர மும்பை பவுலர்கள் பதிவு செய்த எக்கனாமியை விட சிறந்ததாகும்.

- Advertisement -

தற்போது 31 வயதை கடந்துள்ள அவர் டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய போதிலும் தோற்றதைப் பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு பந்துவீச்சு கூட்டணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. கடைசி கட்ட ஓவர்களில் எங்கள் பந்துவீச்சில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டியுள்ளது. கடைசி நேரத்தில் ஒரு சில தேவையற்ற பவுண்டரிகளை நாங்கள் கொடுத்துவிட்டோம். இருப்பினும் அடுத்த போட்டியில் மீண்டும் ஒன்று சேர்ந்து வலுவுடன் திரும்பி வருவோம்” என கூறினார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் முருகன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். அவரை அந்த அணி நிர்வாகம் மீண்டும் வாங்காத காரணத்தால் தற்போது ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட தொடங்கியுள்ளார்.

அந்த அணியில் சச்சின் டெண்டுல்கர், மகிளா ஜெயவர்தனே, ஜாஹீர் கான் போன்ற ஜாம்பவான்கள் பயிற்சியாளராக இருக்கும் நிலையில் இந்தியாவின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா வழி நடத்தி வருகிறார். எனவே இத்தனை ஜாம்பவான்களுக்கு கீழ் விளையாடும் பொன்னான வாய்ப்பை பெற்றுள்ள முருகன் அஸ்வின் அதை கச்சிதமாக பயன்படுத்தி வரும் காலங்களில் இந்திய அணிக்கு விளையாட முயற்சிப்பார் என நம்பலாம்.

Advertisement