69க்கு ஆல் அவுட்.. வருண் சக்ரவர்த்தி மேஜிக்.. நாகலாந்தை பெட்டிப்பாம்பாக அடக்கிய தமிழ்நாடு மெகா வெற்றி

Varun Chakravarthy
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2023 சீசன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் விளையாடி வரும் தமிழ்நாடு அணி டிசம்பர் 5ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற 123வது லீக் போட்டியில் நாகாலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய நாகலாந்து அணிக்கு ஜோஸ்வா ஒசூக்கும் 13, சம்வாங் வாங்னோ 1 என துவக்க வீரர்கள் சந்திப் வாரியார் மற்றும் நடராஜன் வேகத்தில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல அடுத்ததாக வந்த சுமித் குமாரை 20 ரன்களில் அவுட்டாக்கிய சாய் கிஷோர் ஜோனதனை 5 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தி மேஜிக்:
அதனால் 44/4 என தடுமாறிய நாகலாந்து அணிக்கு 3வது இடத்தில் களமிறங்கி 22 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து நங்கூரத்தை போட முயற்சித்த ஒரேன் ங்குல்லியை கிளீன் போல்ட்டாக்கிய வருண் சக்கரவர்த்தி அடுத்ததாக வந்த தஹ்மீத் ரகுமான் 1, ஜிமோனி 1, அகவி எப்தோ 3, கேன்ஸ் 0 என முக்கிய வீரர்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கி வந்த வாக்கிலேயே பெவிலியன் அனுப்பி வைத்தார். அதனால் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நாகலாந்து வெறும் 69 ரன்களுக்கு சுருண்டது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு நாகலாந்தை பெட்டி பாம்பாக அடக்கிய தமிழகம் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 5 ஓவரில் 3 மெய்டன் உட்பட 9 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தார். அவருடன் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 70 என்ற மிகவும் சுலபமான இழப்பை துரத்திய தமிழ்நாட்டுக்கு பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடிய சாய் கிஷோர் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 37* (25) ரன்களும் ஜெகதீசன் 6 பவுண்டரியுடன் 30* ரன்களும் எடுத்தனர். அதனால் 7.5 ஓவரிலேயே 73/0 ரன்கள் எடுத்த தமிழ்நாடு 10 விக்கெட் வித்யாசத்தில் 253 பந்துகள் மீதம் வைத்து மெகா வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: அந்த 2 க்ளாஸ் பிளேயர்ஸ்.. தெ.ஆ டெஸ்ட் தொடரில் இந்தியாவின் துருப்பு சீட்டா இருப்பாங்க.. ஸ்ரீசாந்த் கணிப்பு

அந்த வகையில் குரூப் ஈ பிரிவின் புள்ளி பட்டியலில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள தமிழ்நாடு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அதில் சிறப்பாக விளையாடி டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று மீண்டும் விஜய் ஹசாரே கோப்பையை வெல்லும் முனைப்புடன் தமிழ்நாடு விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement