இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக இதுவரை நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் 2012க்குப்பின் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வென்று வந்தது.
குறிப்பாக அந்த காலகட்டங்களில் 18 தொடர்களை வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக தொடர்களில் தொடர்ச்சியாக வென்ற அணியாக உலக சாதனை படைத்து வந்தது. ஆனால் 4331 நாட்களாக சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்ட இந்தியாவின் அந்த உலக சாதனையையும் நியூசிலாந்து உடைத்துள்ளது. அதனால் இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்தனர்.
12 வருடங்கள்:
மறுபுறம் வரலாறு காணாத வெற்றியை பெற்றதால் நியூசிலாந்து வீரர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் உலகிலேயே ஆஸ்திரேலியாவுக்கு நிகராக இந்தியாவும் வெற்றி பெறுவதற்கு மிகவும் சவாலான கடினமான இடம் என்று இங்கிலாந்து வீரர் டிம் சௌதீ கூறியுள்ளார். அப்படிப்பட்ட கடினமான இடத்தில் 12 வருடங்கள் கழித்து இந்தியாவை தோற்கடித்தது மிகப்பெரிய சாதனை என்றும் அவர் பெருமை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் நீங்கள் வரலாற்றை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். 12 வருடங்களாக 18 தொடர்களில் அவர்களால் தொடர்ந்து வெற்றியை பெற முடிந்துள்ளது. அது வெளிநாட்டு அணிகள் விளையாடுவதற்கு இந்தியா மிகமிக கடினமான இடம் என்பதை காண்பிக்கிறது. என்னுடைய கேரியரை பொறுத்த வரை நான் பல வருடங்களாக விளையாடி வருகிறேன்”
ஆஸ்திரேலியா போல இந்தியா:
“அதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் கடினமான இடங்களாகும். குறிப்பாக இங்கே 12 வருடங்களாக தொடர்ந்து 18 தொடர்களில் அவர்கள் வென்றுள்ளனர். அந்த வெற்றி நடையை உடைத்துள்ளது நல்லது. இது இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது சாத்தியம் என்பதை உலகில் உள்ள மற்ற அணிகளுக்கு காண்பிக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: ரிஷப் பண்ட் கிடையாது.. உண்மையா இந்தியாவின் 2020 – 21 வெற்றிக்கு அவர் தான் காரணம்.. டிம் பெய்ன் பாராட்டு
இதையடுத்து இத்தொடரின் கடைசி போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் துவங்குகிறது. அதிலாவது வெற்றி பெற்று இந்தியா குறைந்தபட்சம் ஒயிட் வாஸ் அவமானத் தோல்வியை தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. சொல்லப்போனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது.



