இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 5 வருடங்களில் 5 சதங்கள் மட்டுமே அடித்து சுமாராக விளையாடி வருகிறார். அது ஒரு சர்வதேச வீரருக்கு உகந்த செயல்பாடு அல்ல என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
எனவே ஆஸ்திரேலியாவில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அது பற்றி கேட்ட போது இந்திய அணியை பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அதிரடியான பதிலடி கொடுத்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி, ரோஹித் சர்மா அசத்துவார்கள் என்றும் கம்பீர் தெரிவித்திருந்தார்.
கம்பீர் மீது விமர்சனம்:
அதற்கு ரிக்கி பாண்டிங் ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல உதவிய ரவி சாஸ்திரி சிறந்த பயிற்சியாளர் என்று முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார். ஆனால் கௌதம் கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொருந்த மாட்டார் என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்ருமாறு. “அதை நான் விரும்பவில்லை. அது நல்ல அறிகுறியும் இல்லை. ஏனெனில் அவரிடம் மிகவும் எளிமையான கேள்வி கேட்கப்பட்டது. தற்போதும் ரிக்கி பாண்டிங் தமக்கு எதிராக விளையாடும் வீரர் என்று கம்பீர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். ஆனால் தற்போது வர்ணனையாளராக இருக்கும் பாண்டிங் தன்னுடைய கருத்துக்களை சொல்வதற்காக சம்பளம் பெறுகிறார்”
சாஸ்திரியை பாருங்க:
“உண்மையில் விராட் கோலி கொஞ்சம் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியவருடைய ஃபார்ம் இந்திய அணிக்கு தற்போது பெரிய கவலை கிடையாது. ஆனால் அழுத்தத்தின் கீழ் பொறுமையாக இருக்க முடியாத இந்திய அணியின் பயிற்சியாளர் தான் அவர்களுடைய பெரிய கவலையாக இருக்கிறார். கடைசியாக இங்கு இந்தியா வென்ற 2 தொடரில் ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்பட்டார்”
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாதது குறித்து பேசிய – ஷர்துல் தாகூர்
“அவர் வீரர்களுடன் சிறந்த சூழ்நிலையை உருவாக்கி கனவுடன் உத்வேகத்துடன் விளையாடுவதற்கான வாய்ப்புகளை கொடுத்தார். ஆனால் தற்போது இந்திய அணி மிகவும் போட்டியுடன் முட்கள் கொண்ட ஒரு நபரை பயிற்சியாளராக நியமித்துள்ளார்கள். என்னைப் பொறுத்த வரை அவர் இந்திய அணிக்கு பொருத்தமானவர் என்று நினைக்கவில்லை” எனக் கூறினார்.



