
சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் போட்டியில் ரஜப் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்த போட்டி துவங்கும் முன்னதாக மழை பெய்ததன் காரணமாக போட்டி 14 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.
அதன்படி முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 96 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 12.1 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஆர்சிபி அணி துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வேளையில் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் அதிரடியாக விளையாட முடியாமல் போனது. இதன் காரணமாக பெங்களூரு அணி மிகப்பெரிய சிக்கலை சந்தித்தது.
அவ்வேளையில் பெங்களூரு அணி சார்பாக ஆறாவது வீரராக களமிறங்கிய டிம் டேவிட் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 50 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த அரைசதம் காரணமாகவே பெங்களூரு அணி ஓரளவு டீசன்டான ரன் குவிப்பை வழங்கியது.
இல்லையெனில் மிகவும் சொற்ப ரன்களில் பெங்களூரு அணி சுருண்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இந்த 14 ஓவர் போட்டியில் இரண்டு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் கடினமான இந்த ஆடுகளத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் டிம் டேவிட் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : எழுதி வெச்சுக்கோங்க.. இதை செஞ்சதும் கோலியை விட பாபர் பெரிய பிளேயராகிடுவாரு.. கராச்சி ஓனர் பேட்டி
அந்த சாதனை யாதெனில் : ஒரு போட்டியில் தோல்வி அடைந்த அணியிலிருந்து ஆட்டநாயகன் விருதினை வென்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை டிம் டேவிட் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.