தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக முள்ளன்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 162 ரன்களை மட்டுமே அடித்ததால் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மீது கடுமையான விமர்சனங்கள் பலரது மத்தியிலும் எழுந்தன. ஏனெனில் இந்த இரண்டாவது போட்டியில் சுப்மன் கில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்ததும் மூன்றாவது வீரராக சூரியகுமார் யாதவ் வருவதற்கு பதிலாக அக்சர் பட்டேல் களத்திற்கு வந்தார்.
நாங்கள் எந்த இடத்திலும் களமிறங்க தயார் : திலக் வர்மா
அப்படி மூன்றாவது வீரராக களமிறங்கிய அவர் 21 பந்துகளை சந்தித்து 21 ரன்கள் மட்டுமே அடித்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது. அதேவேளையில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தலாக செயல்பட்டிருந்தார். இதன் காரணமாக திலக் வர்மா முன்கூட்டியே வந்திருந்தால் நிச்சயம் இலக்கை நோக்கி சென்றிருக்க முடியும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதோடு இனிவரும் போட்டிகளிலாவது 8 பேட்ஸ்மேன்கள் இருக்கும் வேளையில் பிராப்பரான பேட்ஸ்மேன்களை டாப் ஆர்டரில் பயன்படுத்துங்கள் என்கிற கருத்துக்களும் இருந்து வருகின்றன. இந்நிலையில் அக்சர் பட்டேல் மூன்றாவது இடத்தில் களமிறங்கியது குறித்தும், தான் பின்வரிசையில் களமிறங்கியது குறித்தும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான திலக் வர்மா சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : அணியின் நிர்வாகம் எங்களுக்கு வழங்கும் இடத்தினை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்களது இலக்காக இருந்து வருகிறது. இந்திய வீரர்களில் துவக்க வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே எந்த இடத்திலும் விளையாடும் அளவிற்கு தயாராக உள்ளோம். நான் மூன்றாவது இடத்திலிருந்து ஆறாவது இடம் வரை எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு விளையாட தயாராக இருக்கிறேன்.
என்னை போன்றே அணியில் இருக்கும் மற்ற இந்திய வீரர்களும் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தங்களை தகவமைத்து கொள்ள தயாராக இருக்கிறார்கள். அதனால் தான் அடிக்கடி பேட்டிங் ஆர்டரில் இந்த மாற்றங்கள் இருந்து வருகின்றன. அக்சர் பட்டேலை பொறுத்தவரை மூன்றாவது இடத்தில் அவர் களமிறங்குவது இது ஒன்றும் புதிது கிடையாது.
இதையும் படிங்க : எல்லா பாலும் சிக்ஸ் அடிக்க பாக்காதீங்க.. கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இதை பண்ணுங்க.. அபிஷேக் சர்மாவுக்கு – ஏ.பி.டி அட்வைஸ்
ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் இதேபோன்று மூன்றாவது இடத்தில் இறங்கி அற்புதமாக செயல்பட்டுள்ளார். கடந்த போட்டியில் அவரால் அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட முடியாதது குறித்து பெரியதாக எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நிச்சயம் அவராலும் அந்த இடத்தில் சிறப்பாக விளையாட முடியும் என திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



