தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் 2வது போட்டியில் 51 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து 3வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
அப்போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையைப் பெற இரு அணிகளும் தயாராகியுள்ளன. முன்னதாக பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தது முதல் பேட்டிங் வரிசையை இசை நாற்காலி போல மாற்றுவது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. அது பற்றி கேட்டதற்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பேட்டிங் ஆர்டர் என்பது ஓவர்ரேட்டட் என்று கௌதம் கம்பீர் விளக்கம் கொடுத்தார்.
கம்பீர் சொல்படி:
அத்துடன் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை தவிர்த்து மற்ற அனைவரும் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதன் படி கடந்தப் போட்டியில் 214 ரன்களை இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு திடீரென அக்சர் பட்டேல் 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பில் அக்சர் பட்டேல் 21 (21) ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மறுபுறம் கடந்த காலங்களில் 3வது இடத்தில் அசத்தியுள்ள திலக் வர்மா மிடில் ஆர்டரில் விளையாடி 62 ரன்கள் வெற்றிக்கு போராடினார். இந்நிலையில் கௌதம் கம்பீர் சொல்வதை இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் செய்வதற்கு தயாராக இருப்பதாக திலக் வர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தவிர்த்து மற்றவர்கள் வளைவுத்தன்மையுடன் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம்”
ரெடியாக இருக்கோம்:
“3, 4, 5 அல்லது 6 உட்பட இந்திய அணி விரும்பும் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய நான் தயாராக இருக்கிறேன். பேட்டிங் ஆர்டர் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். அது சூழ்நிலையைப் பொறுத்து அமையும். அதை நீங்கள் ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பார்த்திருப்பீர்கள். அப்போட்டியில் மேலே சென்ற அக்சர் பட்டேல் எப்படி விளையாடினார் என்பது உங்களுக்குத் தெரியும்”
இதையும் படிங்க: டி20 போட்டிகளில் மோசமான சாதனையை கடந்த போட்டியில் நிகழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா – விவரம் இதோ
“கடந்த போட்டியை போன்ற ஒரு சில சுமாரான போட்டிகள் அமைவது இயல்பாகும். அனைத்து நேரமும் எங்களுடைய அணியை முன்னிலைப்படுத்தும் நாங்கள் அணிக்காக சிறந்தவற்றை செய்ய விரும்புகிறோம். எங்கள் வீரர்கள் யாரும் சொந்த இடத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. என்னைப் போலவே எங்களுடைய அனைத்து வீரர்களும் அணிக்காக எங்கேயும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறார்கள்” என்று கூறினார்.



