தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக 4வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. ஜோஹன்ஸ்பர்க் நகரில் நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா 283-1 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் சதம் அடித்து 109* ரன்களும் திலக் வர்மா 120* ரன்களும் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தார்கள். பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா 18.2 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 43 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அசத்திய திலக்:
அதனால் சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டெழுந்த இந்தியா வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றிக்கு 120* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய திலக் வருமா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது வென்றார். ஏனெனில் இந்த தொடரில் 4 போட்டிகளையும் சேர்த்து அவர் மொத்தமாக 280 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் ஒரு சர்வதேச டி20 இருதரப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் மாபெரும் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2021 இங்கிலாந்து தொடரில் விராட் கோலி 231 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 22 வயதில் சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை வென்ற முதல் இந்திய வீரராகவும் திலக் வர்மா சாதனை படைத்துள்ளார்.
புதிய சாதனை:
இதற்கு முன் 22 வயதிற்குள் வேறு இந்திய வீரர்கள் இந்த மூன்றையும் பதிவு செய்ததில்லை. அது போக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மட்டுமே 2 ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார்.
இதையும் படிங்க: 12 விக்கெட் எடுத்த வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக திலக் வர்மாவிற்கு தொடர்நாயகன் விருது – வழங்கியது ஏன்?
இது மட்டுமின்றி ஒரு சர்வதேச டி20 போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோருடைய சாதனையையும் திலக் வர்மா சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோகித்தும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் சஞ்சு சாம்சனும் தலா 10 சிக்ஸர்கள் அடித்துள்ளார்கள். அந்த வகையில் இந்திய அணிக்கு மற்றுமொரு இளம் வீரர் கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.



