இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திர வீரரான திலக் வர்மா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வேளையில் நேற்று செஞ்சூரியன் நகரில் நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியில் 56 பந்துகளில் 107 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை நேற்று பதிவு செய்த அவர் 56 பந்துகளில் 8 பவுண்டரி 7 சிக்சர் என 107 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார்.
சதத்தை கொண்டாடியது அவருக்காகத்தான் :
அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது திலக் வர்மா இந்திய அணியின் ஓய்வறையை நோக்கி பிளையிங் கிஸ் ஒன்றினை பறக்க விட்டு தனது சதத்தை கொண்டாடியிருந்தார்.
இந்நிலையில் அதற்கான காரணத்தையும் அவர் போட்டி முடிந்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் சதம் அடித்த மகிழ்ச்சியில் பிளையிங் கிஸ் கொடுத்தது கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு தான். ஏனெனில் நான் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தனது இடத்தை அவர் எனக்காக விட்டுக் கொடுத்தார். இதன் காரணமாக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே அந்த கொண்டாட்டத்தில் நான் ஈடுபட்டேன்.
அவர் தனது மூன்றாவது இடத்தை எனக்கு விட்டுக் கொடுத்ததாலே நான் டாப் ஆர்டரில் வந்து மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது. கடந்த இரண்டு டி20 தொடர்களாக விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நான் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வந்தேன். ஆனால் தற்போது எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று பொறுமையுடன் காத்திருந்தேன்.
அதற்கு பலனாக இந்த சதம் எனக்கு வந்துள்ளது என திலக் வரர்மா பேசியுள்ளார். நேற்றைய போட்டி முடிந்து திலக் வர்மா அடித்த சதம் குறித்து பேசியிருந்த சூரியகுமார் யாதவ் கூறுகையில் : இரண்டாவது போட்டி முடிந்த பின்னர் திலக் வர்மா மூன்றாவது போட்டிக்கு முன்னதாக என்னுடைய அறைக்கு வந்து நான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய விருப்பப்படுகிறேன் எனக்காக அந்த அனுமதியை வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க : ரஞ்சி டிராபி போட்டியில் தரமான கம்பேக் கொடுத்த முகமது ஷ்மி – இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
அதன்படியே நானும் அவரிடம் : தாராளமாக நான் வாய்ப்பு வழங்குகிறேன். அதில் நீங்கள் உங்களுக்கு வரும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று அவருக்கு அந்த அனுமதியை வழங்கினேன் என கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



