ஹைதராபாத்தை சேர்ந்த 21 வயதான இளம் இடது கை ஆட்டக்காரரான திலக் வர்மா கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது மும்பை அணிக்காக அறிமுகமாகினார். தனது அறிமுக சீசனிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கடந்த மூன்று சீசனில் 38 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 40 ரன்கள் சராசரியுடன் 790 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், ஃபினிஷர் என எந்த இடத்தில் களமிறங்கினாலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு கடந்த ஆண்டு இந்திய டி20 போட்டிகளிலும் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
நிரந்தர இடத்தினை பிடிக்க திலக் வர்மா முயற்சி :
அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 33 ரன்கள் சராசரியுடன் 241 ரன்களை குவித்துள்ளார். அது தவிர கடந்த ஆண்டு 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 68 ரன்களை குவித்துள்ளார். என்னதான் இப்படி பேட்டிங்கில் அவர் அசத்தலாக செயல்பட்டாலும் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், சிவம் துபே போன்ற இடது கை வீரர்களின் ஆதிக்கம் அதிகமானதால் அவருக்கு இந்திய அணியில் இருந்து வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய அணிக்காக அறிமுகமாக பல்வேறு வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் வெறும் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால் வேலைக்காகாது என்பதை உணர்ந்த திலக் வர்மா தற்போது பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஆர்வத்துடன் இருக்கும் அவர் சிவப்பு பந்தில் தற்போது பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த ஆண்டு முதலே நான் பந்துவீச்சில் பங்களிக்க வேண்டும் என்பதை உணர்ந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை நாம் பெரிய அளவில் வாய்ப்புகளை பெற வேண்டுமெனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் தற்போது நான் பந்துவீச்சில் கூடுதல் கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறேன்.
தற்போது எனது இந்த பந்துவீச்சு பயிற்சி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ரெட் பாலில் சிறப்பாக பௌலிங் செய்ய பணியாற்றி வருகிறேன். ஒரு ஆல்ரவுண்டராக ரெட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஒயிட்பால் கிரிக்கெட்டிலும் அது நம்மை மெருகேற்றும். எனவே தற்போது சிவப்பு பந்தில் அதிக அளவில் பயிற்சி எடுத்து வருவதாக திலக் வர்மா கூறியுள்ளார்.
இதையும் படிங்க : 4, 4, 6, 6, 6, 4.. சுட்டிக்குழந்தையை அடித்து நொறுக்கிய டிராவிஸ்.. ஒரே ஓவரில் இங்கிலாந்து வெற்றியை பறித்து மிரட்டல்
21 வயதே ஆன திறமை வாய்ந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் திலக் வர்மா இப்படி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தாமல் தற்போது பந்து வீச்சிலும் கூடுதல் கவனத்தை செலுத்தி வருவது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ரவீந்திர ஜடேஜா வெளியேறும் பட்சத்தில் அவரது இடத்தை பிடிக்கும் நோக்கிலேயே திலக் வர்மா இப்படி கூடுதல் கவனத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



