இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு சௌதம்டன் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் மார்ஷ் – மேத்தியூ ஷார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடத் துவங்கினர். அதில் சாம் கரண் வீசிய 4வது ஓவரில் 4, 4, 6, 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட டிராவிஸ் ஹெட் வெறும் 19 பந்துகளில் அரை சதமடித்தார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து அவர் மொத்தமாக 8 பவுண்டரி 4 சிக்சருடன் 59 (23) ரன்கள் குவித்து அவுட்டானார்.
ஒரே ஓவரில் 30 ரன்கள்:
அவருடன் சேர்ந்து 86 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த மேத்தியூ ஷார்ட் 41 (26) ரன்கள் விளாசி அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த வீரர்களில் ஜோஸ் இங்லீஷ் 37 (27) ரன்கள் எடுத்தது தவிர்த்து கேப்டன் மார்ஷ் 2, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10, டிம் டேவிட் 0, கேமரூன் கிரீன் 13 என மற்ற வீரர்களை இங்கிலாந்து சொற்ப ரன்களில் அவுட்டாக்கியது.
அதனால் 200 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவை 19.3 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2, சக்கிப் மஹ்மூத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 180 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் கேப்டன் பில் சால்ட் 20, வில் ஜேக்ஸ் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
டிராவிஸ் ஹெட் அதிரடி:
அதே போல அடுத்ததாக வந்த லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாட முயற்சித்து 37 ரன்களில் அவுட்டானார். ஆனால் அவரை தவிர்த்து ஜேக்கப் பெத்தல் 2, ஷாம் கரண் 18, ஜேமி ஓவர்டன் 15, ஜோர்டான் கோக்ஸ் 17 என மற்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 19.2 ஓவரிலேயே இங்கிலாந்தை 151 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றது.
இதையும் படிங்க: விராட், ரோஹித் மாதிரி வரவேண்டிய ராகுல்.. இதை செய்யலன்னா காணாம போய்டுவாரு.. ஆகாஷ் சோப்ரா
அந்த அணிக்கு அதிகபட்சமாக சீன் அபௌட் 3, ஆடம் ஜாம்பா 2, ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றிக்கு 59 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக சுட்டிக்குழந்தை என்று சிஎஸ்கே ரசிகர்கள் அழைக்கும் சாம் கரணுக்கு எதிராக அவர் ஒரே ஓவரில் 30 ரன்களை குவித்ததே கடைசியில் ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தின் வெற்றியைப் பறிக்க முக்கிய பங்காற்றியது.



