ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜூலை 13ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே 152/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக 93* (53), கேப்டன் சுப்மன் கில் 58* (39) ரன்கள் அடித்து 15.2 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் எளிதாக வென்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் துசார் தேஷ்பாண்டே இந்தியாவுக்காக அறிமுகமானார்.
சாதனையும் கேரக்டரும்:
மும்பையை சேர்ந்த அவர் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணியில் அறிமுகமாகி விளையாடினார். அந்த வாய்ப்பில் கணிசமான விக்கெட்டுகளை எடுத்த அவர் பல தருணங்களில் அதற்கு சமமாக ரன்களை வாரி வழங்கி சிஎஸ்கே ரசிகர்களையே கடுப்பேற்றினார். ஆனால் அவருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து அவரையே வைத்து 2023 ஐபிஎல் கோப்பையை வென்றது தோனியின் சாமர்த்தியமாகும்.
அப்படி சிஎஸ்கே அணியில் ஓரளவு நன்றாக செயல்பட்டதன் காரணமாகவே அவருக்கு இந்தியாவுக்காக இத்தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து இப்போட்டியில் அறிமுகமான அவர் 1 விக்கெட் எடுத்தார். ஆனால் அதற்கு நிகராக 3 ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கிய அவர் 10 என்ற எக்கனாமியில் சுமாராகவே பந்து வீசினார். அதை பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்றவில்லையா என்று அவரை கலாய்கின்றனர்.
அது ஒரு புறமிருக்க இப்போட்டியில் அறிமுகமான தேஷ்பாண்டே 1 விக்கெட் எடுத்தார். அவரையும் சேர்த்து இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 74 வீரர்கள் குறைந்தபட்சம் 1 விக்கெட்டை எடுத்துள்ளனர். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்தது 1 விக்கெட் எடுத்த அதிக வீரர்களை கொண்ட அணி என்ற வித்தியாசமான சாதனையும் இந்தியா படைத்துள்ளது.
இதையும் படிங்க: தொடர்ந்து 2வது முறை.. கேப்டனுக்கு இவ்வளவு சுயநலமா? சுப்மன் கில் மீது ரசிகர்கள் அதிருப்தி
இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்காக 73 வீரர்கள் குறைந்தது 1 விக்கெட் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை முறையே 69, 64, 63 வீரர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதைத் தொடர்ந்து இந்த தொடரின் கடைசிப் போட்டி ஜூலை 14ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



