ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 152/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதன் பின் 163 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக 93* (53) ரன்களும் கேப்டன் சுப்மன் கில் 58* (39) ரன்களும் அடித்தனர். அதனால் 15.2 ஓவரிலேயே 156/0 ரன்கள் எடுத்த இந்தியா எளிதாக வென்று கடைசி போட்டிக்கு முன்பாகவே 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றியுள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் முதல் முறையாக சுப்மன் கில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
ரசிகர்கள் அதிருப்தி:
அந்த நிலையில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியாவை 2வது போட்டியில் அபிஷேக் ஷர்மா அடித்து நொறுக்கி 100 ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். ஆனால் 3வது போட்டியில் ஜெய்ஸ்வால் வந்ததால் அவரை மூன்றாவது இடத்தில் களமிறக்கிய சுப்மன் கில் தொடர்ந்து தன்னை ஓப்பனிங்கில் களமிறக்கினார்.
இருப்பினும் உள்ளூர் முதல் ஐபிஎல் வரை துவக்க வீரராகவே விளையாடிய அபிஷேக் ஷர்மா இந்தத் தொடரில் தான் முதல் முறையாக அறிமுகமானார். மறுபுறம் 2019 முதல் இந்தியாவுக்காக விளையாடி வரும் சுப்மன் கில் இதற்கு முன் 3, 4 ஆகிய இடங்களில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார். ஆனால் 3வது போட்டியில் கேப்டனாக கில் அவருக்கு ஓப்பனிங் இடத்தை கொடுத்து பெருந்தன்மை காட்டாமல் சுயநலமாக செயல்பட்டதாக ரசிகர்கள் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே ஜெய்ஸ்வால் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் சுப்மன் கில் 38 (26) ரன்கள் வரை மிகவும் நிதானமாக விளையாடினார். அந்த வகையில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 83 (49) ரன்களை தொட்ட போது இந்தியாவுக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது வெற்றி பாதைக்கு அழைத்து வந்த ஜெய்ஸ்வாலை கேப்டனாக பெருந்தன்மையுடன் கில் சதமடிக்க விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதை செய்யாத கில் அப்போதிலிருந்து பெரும்பாலும் ஸ்ட்ரைக்கை தன் பக்கமே வைத்துக் கொண்டு அதிரடியாக விளையாடி தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்தார். அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் கேப்டன் இப்படி சுயநலமாக இருக்கக் கூடாது என்று அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: அது 2 விதமா வந்துச்சு.. ஜிம்பாப்பேவை ஈஸியா வீழ்த்திய என்னோட திட்டம் இது தான்.. ஜெய்ஸ்வால் பேட்டி
அங்கே இருவருமே நாட்டுக்காக தான் விளையாடினார். இருப்பினும் தம்மை விட வயதிலும் அனுபவத்திலும் குறைந்திருக்கும் வீரருக்கு கேப்டன் சதமடிக்கும் வாய்ப்பை கொடுக்கும் போது அந்த இளம் வீரருக்கு இன்னும் சிறப்பாக விளையாடுவதற்கான உத்வேகம் கிடைக்கும். அதையே வெற்றி உறுதியான பின்பும் இப்போட்டியில் கில் செய்யவில்லை என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.



