பண்றதெல்லாம் சீட்டிங், இதுல நேர்மையை பற்றி பேச்சு வேற – ஆஸி, இங்கிலாந்தை வெளுக்கும் 2 முன்னாள் வீரர்கள்

Jos Buttler Mark wood
- Advertisement -

விரைவில் துவங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் உலக கோப்பைக்கு முன்பாக கடைசியாக சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. அக்டோபர் 9ஆம் தேதியன்று பெர்த் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 12 பவுண்டரி 3 சிக்சருடன் 84 (51) ரன்களும் கேப்டன் ஜோஸ் பட்லர் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68 (32) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 209 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் நங்கூரமாக 8 பவுண்டரி 2 சிக்சருடன் 73 (44) ரன்கள் எடுத்தாலும் கேமரூன் க்ரீன் 1, மார்ஷ் 36, கேப்டன் பின்ச் 12, ஸ்டோனிஸ் 35, டிம் டேவிட் 0, மேத்தியூ வெட் 21 என முக்கிய வீரர்கள் இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 20 ஓவரில் 200/9 ரன்களை மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியா 8 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

- Advertisement -

செய்றதே சீட்டிங்:
மேலும் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் இத்தொடரின் 2வது போட்டி அக்டோபர் 12ஆம் தேதியன்று நடைபெறுகிறது. முன்னதாக இப்போட்டியில் மார்க் வுட் வீசிய 17வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் அதிரடியாக விளையாட முயற்சித்த நிலையில் பந்து கேட்ச்சாக மாறியது. அதை பிடிப்பதற்காக பந்தை பார்த்துக்கொண்டே ஓடிவந்த மார்க் வுட்’டை பந்தை பிடிக்க விடாமல் வேண்டுமென்றே தடுக்கும் வகையில் கையை குறுக்கே நீட்டி ஓடிய மேத்தியூ வேட் டைவ் அடித்து வெள்ளைக்கோட்டை தொட்டு தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார்.

அதனால் மார்க் வுட் மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் நடுவரிடம் எதிர்ப்பு தெரிவித்து புகார் செய்யாமல் அமைதியாக சென்றதால் போட்டி நடைபெற்று முடிந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில் அந்த இடத்தில் விதிமுறைப்படி பீல்டிங் செய்யவிடாமல் மேத்தியூ வேட் தடுத்தது அப்பட்டமாக தெரிந்தது. அந்த நிலையில் அதை இங்கிலாந்து அவுட் கேட்டிருந்தால் நிச்சயம் அவுட் கொடுக்கப்பட்டிருக்கும்.

- Advertisement -

ஆனால் அதை செய்யாதது ஏன் என்று போட்டி முடிந்ததும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது “நீண்ட நாட்கள் கழித்து ஆஸ்திரேலியா வந்துள்ளதால் ஆஸ்திரேலிய ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் இந்த சுற்றுப்பயணத்தை சுமூகமாக விளையாடி நிறைவு செய்ய விரும்புவதால் அவுட் கேட்கவில்லை” என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூலாக பதிலளித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அதனால் சமீபத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் செய்த போது நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக விமர்சித்த இதே இங்கிலாந்தினர் தங்களுக்கு நேர்மைக்குப் புறம்பான அநியாயம் நடந்தும் அதற்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன் என்று ஏராளமான இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

அத்துடன் இப்போட்டியில் வென்ற காரணத்தால் இங்கிலாந்து நேர்மையை சாகடித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கும் ரசிகர்கள் ஒருவேளை தோற்றிருந்தால் நிச்சயம் இங்கிலாந்தினர் கொதித்திருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அதனால் நேர்மை என்பது இங்கிலாந்து, ஆஸ்திரேலியர்களின் அகராதியில் இல்லை என்றும் ரசிகர்கள் வெளுக்கிறார்கள். குறிப்பாக இந்த இடத்தில் ஆஸ்திரேலியா சீட்டிங் செய்ததாகவும் இங்கிலாந்து நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாகவும் முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் சாடியுள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “பரிதாபத்துக்குரியது, ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் இது சீட்டிங், இந்தச் செயல் கிரிக்கெட்டின் நேர்மைக்கு உட்பட்டதல்ல. அங்கே பீல்டிங் செய்ய விடாமல் தடுத்த போதிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதற்கு ஜோஸ் பட்லர் சொன்ன காரணம் பயங்கரமானது. இவர்களின் உரிமை உணர்வு நம்ப முடியாதது. மொத்தத்தில் இவர்கள் கிரிக்கெட்டின் நேர்மை தன்மையை முட்டாள்தனம் செய்கின்றனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க : நான் ஏன் சிங்கிள் எடுக்கணும் – செய்தியாளர் கேள்விக்கு இஷான் கிஷன் கொடுத்த மாஸ் பதிலடி

அதே போல் கூலாக பதிலளித்த பட்லருக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயான் பிஷப் “அப்படியானால் இந்த சுற்றுப்பயணத்தில் உங்களுக்கு குறைவான ஆபத்து இருந்தால் அதை எதிர்த்து முறையீடு செய்திருப்பீர்களா?” என்ற வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement