சோளி முடிஞ்சுனு சொன்னாங்க ஆனால் சாதிச்சுட்ட ப்ரோ ! ஹர்டிக் பாண்டியவை பாராட்டிய அவரின் சகோதரர்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. குஜராத் நகரை மையமாக வைத்து 5000க்கும் மேற்பட்ட கோடிகளில் உருவாக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் நட்சத்திர இந்திய ஆல்-ரவுண்டராக கருதப்படும் ஹர்திக் பாண்டியா 15 கோடி கொடுத்து வாங்கியதுடன் நேரடியாக கேப்டனாக நியமித்ததும் அதில் அவர் சாதித்துக் காட்டியுள்ளதும் உண்மையாகவே பாராட்டுக்குரியதாகும். ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே காயத்தால் தவித்து வந்த அவர் அதன் காரணமாக 2021 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய போது பந்து வீசாமல் பேட்டிங்கில் மட்டுமே சுமாராக செயல்பட்டார். இருப்பினும் இந்தியாவுக்காக பந்து வீசுவார் என்ற நம்பிக்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர்.

பாண்டியாவின் எழுச்சி:
ஆனால் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவர் ஒரு பந்து கூட வீசாமல் ஏமாற்றமளித்தார். மேலும் அந்த தொடர் முழுவதும் ஒருசில ஓவர்களை மட்டுமே வீசிய அவர் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டார். அது நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத மோசமான தோல்வியை இந்தியாவுக்கு பரிசளித்தது. அதனால் கடுப்பான இந்திய அணி நிர்வாகம் இனிமேல் பந்துவீசி முழு ஆல்-ரவுண்டராக திரும்பி வரும்வரை இந்திய அணியில் இடமில்லை என்று அணியிலிருந்து அதிரடியாக நீக்கியது.

- Advertisement -

அதே காரணத்தால் தன்னை அடையாளப்படுத்திய மும்பை அணி நிர்வாகமும் ஐபிஎல் தொடரிலிருந்து கழற்றிவிட்டது. அதனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபமில்லாத இவர் தலைமையில் குஜராத் எங்கே அதுவும் முதல் சீசனிலேயே கோப்பையை வெல்லப் போகிறது என்று ஆரம்பத்தில் பெரும்பாலனவர்கள் குறைத்து எடை போட்டனர்.

இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்த ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடங்கியதும் வழக்கமாக களமிறங்கும் மிடில் ஆர்டருக்கு பதிலாக 3-வது இடத்தில் களமிறங்கி பேட்டிங்கில் தனது அணி சரியும் போதெல்லாம் தூணாக தாங்கிப் பிடித்தார். அதேப்போல் பந்துவீச்சிலும் முகமது சமி போன்றவர்கள் தடுமாறும் போது அதை சரி செய்யும் வகையில் தேவையான நேரங்களில் சிறப்பாக பந்துவீசிய அவர் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டார்.

- Advertisement -

நிரூபித்த பாண்டியா:
அப்படி கேப்டனாக அசத்திய அவரைப் பார்த்து ரசித் கான், டேவிட் மில்லர் என இதர அனைத்து வீரர்களும் அனைத்துப் போட்டிகளிலும் கச்சிதமாக செயல்பட்டதால் பாண்டியா தலைமையில் லீக் சுற்றில் சொல்லி அடித்த குஜராத் 14 போட்டிகளில் 10 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று திரும்பி பார்க்க வைத்தது. அதோடு நிற்காமல் நாக்-அவுட் சுற்றில் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்று ராஜஸ்தானை தோற்கடித்து முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

அதனால் ஆரம்பத்தில் யாரெல்லாம் குஜராத் வெற்றி பெறாது என நினைத்தார்களோ அவர்கள் இறுதியில் அனுபவமில்லாத பாண்டியா தலைமையில் கோப்பையை வென்றதால் வாயடைத்துப் போனார்கள். அதிலும் அவரின் திறமையை எடை போட்டவர்களுக்கு பைனலில் 3 விக்கெட்டுகள் 34 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற பாண்டியா தன்னை மீண்டும் சிறந்த ஆல்-ரவுண்டர் என நிரூபித்து இந்திய அணியில் ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் குறைவான நட்சத்திர வீரர்களை வைத்து நிறைய இளம் வீரர்களை சரியாக வழி நடத்திய அவரின் கேப்டன்ஷிப் தோனியை போலவே இருந்ததாக நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டும் அளவுக்கு அனுபவமில்லாத கேப்டன் பதவியிலும் அவர் அசத்தியுள்ளார்.

- Advertisement -

சாதிச்சுட்ட ப்ரோ:
மொத்தத்தில் தன்னை முடிந்து போனவர்கள் என்று கூறியவர்களுக்கு வாயால் பேசாமல் களத்தில் 480 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்து சிறந்த ஆல்ரவுண்டராக அசத்தியதுடன் கேப்டனாக கோப்பையை வென்று நிரூபித்துள்ள ஹர்திக் பாண்டியா செயலில் சாதித்துக் காட்டியுள்ளார். இந்நிலையில் முடிந்து போனவர் என்று எழுதியவர்களே பாராட்டும் அளவுக்கு சாதித்து காட்டியுள்ளாய் என்று ஹர்திக் பாண்டியா சகோதர் க்ருனால் பாண்டியா பாராட்டியுள்ளார்.

இது பற்றி முதல் முறையாக அவருடன் இணைந்து விளையாடாமல் லக்னோவுக்காக விளையாடிய அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சி பொங்க அவர் எழுதியுள்ளது பின்வருமாறு. “எனது ப்ரோ, உங்களின் இந்த வெற்றிக்கு பின்புறம் எவ்வளவு கடினமான உழைப்பு உள்ளது என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். காலையில் நேரமே எழுந்து கட்டுக்கோப்புடன் மன தைரியத்துடன் எண்ணற்ற மணி நேரங்கள் பயிற்சி செய்தீர்கள்.

இதையும் படிங்க : அவங்க 2 பேரும் சேர்ந்து பேட்டிங் செஞ்சா 6 ஓவரில் 120 ரன்கள் வரும் – கவாஸ்கரை கவர்ந்த 2 இந்திய சரவெடி வீரர்கள்

அதற்கு பலனாய் கோப்பை எனும் வெற்றிக்கனியை வென்றுள்ளீர்கள். இவை அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர். அனைவரும் உங்களை முடிந்து போனவர் என்று எழுதினார்கள். ஆனால் நீங்கள் வரலாற்றை எழுதியுள்ளீர்கள். ஒரு லட்சம் ரசிகர்கள் உங்களது பெயரை ஆரவாரம் செய்த போது நான் அங்கு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Advertisement