ஆசிய கோப்பை வேண்டாம், இந்தியாவை தோற்கடிச்சா போதும் – பாகிஸ்தானின் அணுகுமுறையை விமர்சிக்கும் முன்னாள் பாக் வீரர்

INDvsPAK
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் வரும் ஆகஸ்ட் 27 முதல் ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. வரலாற்றில் 15வது முறையாக நடைபெறும் இந்தத் தொடர் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. இந்த தொடருக்கு இன்னும் சுமார் 15 நாட்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் அதில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அந்த வகையில் 7 கோப்பைகளை வென்று 2018இல் நடந்த கடைசி ஆசிய கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அரஷ்தீப் சிங் போன்ற திறமையான அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில் வரலாற்றில் 2 ஆசிய கோப்பைகளை வென்ற பாகிஸ்தான் இம்முறை நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த வருடம் இதே துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் அவரது தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக உலக கோப்பையில் இந்தியாவை மண்ணைக் கவ்வ வைத்து சரித்திரத்தை மாற்றி எழுதியது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 28இல் அதே துபாய் மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் அந்த அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி:
அந்த போட்டிக்காக அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சடாப் கான், முஹம்மது ரிஸ்வான், சாஹீன் ஆப்ரிடி, பகர் ஜமான் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ள அந்த அணியில் அனுபவ நட்சத்திர வீரர் சோயப் மாலிக் சேர்க்கப்படாதது நிறைய முன்னாள் வீரர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. அதேப்போல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஹசன் அலியும் சேர்க்கப்படாதது கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்பு சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்ட வீரர்கள் மீண்டும் இந்த தொடருக்கான அணியில் எதன் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் தௌசிப் அகமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பரம எதிரியான இந்தியாவுக்கு எதிரான 2 – 3 போட்டிகளை வென்றால் போதும் என்ற எண்ணத்துடன் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர் ஆசிய கோப்பையை வெல்ல வேண்டுமென்ற கண்ணோட்டத்துடன் தேர்வு செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவை சாய்த்தால் போதும்:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த கதை சமீபத்திய நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. நீங்கள் அணியை செட்டிலாகி விளையாட மறுக்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட அதே வீரர்கள் தற்போது அதே வழியில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அணிக்கு முக்கியமானவர்கள் என்ற பெயரில் சேர்க்கப்பட்டுள்ள அதே வீரர்கள் 2 வருடங்களுக்கு முன்பு நீக்கப்படும் போது கிரிக்கெட்டிலிருந்து விடை பெற வேண்டும் என்று சொன்ன அணி நிர்வாகம் தற்போது மீண்டும் சேர்த்துள்ளது. இது அணியில் பேக்-அப் வீரர்களை உருவாக்காத உங்களின் தோல்வியை காட்டுகிறது”

“நீங்கள் செட்டிலாகாமல் விளையாடும்போது எதுவும் நடக்காது. சவுத் ஷகீல் போன்ற 2 – 3 நல்ல இளம் வீரர்கள் எங்கே? நாங்கள் நமது அணியை சிறப்பாக இருப்பதையே விரும்புகிறோம். மேலும் சோயப் மாலிக்கை தேர்வுக்குழு தேர்வு செய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அணி ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அக்கறையில் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவில்லை”

“மாறாக இந்தியாவுக்கு எதிரான அந்த 2 – 3 போட்டிகளை வென்றால் போதும் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது அணி நிர்வாகம் இந்தியாவுக்கு எதிராக வென்றால் அதுவே போதும் என்று நினைப்பது சரியான வழியல்ல, நீங்கள் நல்ல திட்டத்தை வகுத்திருக்க வேண்டும்” என்று 1980 – 1993 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானுக்காக 104 சர்வதேச போட்டிகளில் விளையாடி 148 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஆதங்கத்துடன் பேசினார்.

ஆசிய கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி இதோ:
பாபர் அசாம் (கேப்டன்), ஷடாப் கான் (துணை-கேப்டன்), ஆசிப் அலி, பகார் ஜமான் , ஹைதர் அலி, ஹாரீஸ்ரவூப், இப்ட்டிகர் அஹ்மத் , குஷ்தில் ஷாஹ், முஹம்மத் நவாஸ், முஹம்மத் ரிஸ்வான், முஹம்மத் வாசிம், நசீம் ஷாஹ், ஷாஹீன் அப்ரிடி, ஷ்ஹனவாஸ் டஹானி, உஸ்மான் காதர்

Advertisement