இலங்கையைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த மாபெரும் உலக சாதனை படைத்த பவுலராக வரலாறு படைத்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்து யாராலும் தொட முடியாத பிரம்மாண்ட சரித்திரத்தை படைத்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங், ஜேக் காலிஸ் போன்ற உலகின் அனைத்து தரமான பேட்ஸ்மேன்களுக்கும் மிகப்பெரிய சவாலை கொடுத்த பெருமைக்குரியவர்.
அப்படிப்பட்ட அவருடைய வாழ்க்கை மற்றும் கேரியர் பின்னணியை மையப்படுத்தி 800 என்ற பெயரில் விரைவில் சுயசரிதை திரைப்படம் வெளியாக உள்ளது. தம்முடைய கேரியரில் ஆரம்ப காலங்களில் பவுலிங் ஆக்சன் சம்பந்தமாக சந்தித்த பிரச்சனைகள் மற்றும் நிறைய சவால்களை கடந்து முரளிதரன் எவ்வாறு சாதித்தார் என்பதை பேசும் அந்த படத்தின் ட்ரைலரை இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்திய நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
இனி பிறக்க போவதில்லை:
அப்போது முரளிதரன் பற்றி நிறைய அம்சங்களை பேசிய அவர் தூஷ்ரா எனப்படும் வித்தியாசமான பந்தை சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக வீசுவதற்கு முன்பாக 18 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்த பின்னணியை பகிர்ந்தது அனைவரையும் வியப்பில் ஆழத்தியது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய முத்தையா முரளிதரன் 16 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒரு வீரர் இனி இந்த உலகத்தில் பிறக்கப் போவதில்லை அப்படியே வந்தாலும் அவருடைய சாதனைகளை உடைப்பது அசாத்தியமற்றது என பாராட்டினார்.
அத்துடன் சச்சின், சேவாக் போன்றவர்கள் தம்முடைய பவுலிங்கை ஓரளவு நன்றாக கணித்து சிறப்பாக விளையாடினார்கள் என்று தெரிவித்த முரளிதரன் தற்போதைய பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் மட்டும் ஆரம்பம் முதலே தடுமாறியதாக கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சச்சின் என்னுடைய பந்துகளை நன்றாக படிப்பார். இருப்பினும் அது பலரால் முடியாது. குறிப்பாக பிரைன் லாரா எனக்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட்டாலும் அதிகமாக அடித்து நொறுக்க மாட்டார்”
“அத்துடன் இந்த விளையாட்டில் விளையாடிய மகத்தான வீரர்களில் ஒருவரான ராகுல் டிராவிட் எப்போதுமே என்னுடைய பந்துகளை கணித்ததில்லை. இருப்பினும் சச்சின், சேவாக், கௌதம் கம்பீர் போன்றவர்கள் கணிப்பார்கள். மேலும் என்னுடைய அணியிலும் சிலர் எனது பந்துகளை கணித்து விளையாடுபவர்கள் சிலர் தடுமாறுவார்கள். கிரிக்கெட்டில் சச்சின் சாதித்துள்ளதை யாராலும் தொட முடியாது”
இதையும் படிங்க: அப்போ இத்தனை நாள் உழைச்ச இஷான் கிசான் எங்க போவாரு? பேசாம ஸ்ரேயாஸ் ஐயரை ட்ராப் பண்ணுங்க – முன்னாள் இந்திய வீரர் அதிரடி
“சொல்லப்போனால் ஒருவரால் 15 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சதமடிக்க முடியாது. எனவே என்னுடைய வாழ்நாளில் இன்னொரு சச்சின் டெண்டுல்கர் பிறக்கப் போவதில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல 16 வயதில் அறிமுகமாகி உலகின் மகத்தான பவுலர்களை எதிர்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சச்சின் போன்ற ஒருவரை மீண்டும் பார்ப்பது அசாத்தியமற்றது என்றே சொல்லலாம்.