ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக அதில் பங்கேற்கும் 16 அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகின்றன. இந்த தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா பயணித்து பெர்த் நகரில் வலைப்பயிற்சிகளை துவங்கியுள்ளது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றில் வெளியேறிய இந்தியா அதன்பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது.
ஆனாலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறி விமர்சனத்திற்கு உள்ளான இந்தியா அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க தொடரில் வென்று மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது. இருப்பினும் ஆசிய கோப்பை தோல்வியைப் போலவே ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 2 முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறியதும் இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பட்டாம்பூச்சி பறக்குது:
எது எப்படி இருந்தாலும் தற்போது நிலவும் குறைகளையும் பின்னடைவுகளையும் சரிசெய்ய கடைசி வாய்ப்பாக உலகக் கோப்பைக்கு முன்பாக 4 பயிற்சி போட்டிகளில் இந்தியா களமிறங்குகிறது. அதற்கு பெர்த் நகரில் இருக்கும் வாக்கா மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக வலைப் பயிற்சி செய்வதே பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வை கொடுப்பதாக நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் இதர இந்திய வீரர்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 6 ஆட்டநாயகன் விருதுகளை வென்று மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடிக்கும் திறமை பெற்றுள்ள அவர் தற்சமயத்தில் ரோகித், கோலி, ராகுல் ஆகியோரை விட உச்சகட்ட பார்மில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதனால் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு அவரது ஆட்டம் அவசியமாகும் நிலையில் இதுவரை இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இப்போதுதான் விளையாட உள்ளார்.
அதை பற்றி சூர்யகுமார் யாதவ் பேசியது பின்வருமாறு. “இங்கு வந்து மைதானத்தில் நடந்து, ஓடி முதல் முறையாக வலைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். அந்த வகையில் இங்கு என்னுடைய முதல் வலை பயிற்சி சிறப்பாக இருந்தது. நீண்ட காலமாகவே இங்குள்ள வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை உணர வேண்டும் என்று நான் காத்திருந்தேன். முதல் முறையாக இங்கு விளையாடுவதால் தற்போது மெதுவாக பயிற்சிகளை தொடங்கியுள்ள எனக்கு அதீத ஆர்வமும் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வும் ஏற்பட்டுள்ளது”
“அதே சமயம் இந்த சூழ்நிலையில் உங்களது திறமைகளை எவ்வாறு சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். முதல் முறையாக இங்கு விளையாடுவதால் ஆர்வம் ஏற்பட்டுள்ள அதே சமயம் வழக்கமான அடிப்படை செயல்பாடுகளை நான் பின்பற்றி வருகிறேன். பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் மைதானங்கள் பெரிதாகவும் வேகம், பவுன்ஸ் இருக்கும் என்றும் அனைவரும் பேசி கேட்டுள்ளேன். தற்போது பயிற்சி செய்யும் போது அதை நன்றாக உணர்கிறேன்”
“அதைவிட இந்த சூழ்நிலை மற்றும் மைதானங்களுக்கு ஏற்றவாறு எப்படி ரன்களை அடிக்க வேண்டுமென்ற புதிய திட்டத்தை வகுப்பது முக்கியமாகும். இந்த புதிய கால சூழ்நிலை மற்றும் சவாலுக்கு நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார். அவரை போலவே அர்ஷிதீப் சிங், ஹர்ஷல் படேல், அக்சர் படேல் போன்ற வீரர்களும் தங்களது கேரியரில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்த உலக கோப்பையில் விளையாடுகின்றனர்.
இதையும் படிங்க : கலங்கிய கண்கள், சோகத்துடன் இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டியில் விளையாடிய டேவிட் மில்லர் – ரசிகர்களும் சோகம்
அதனால் இங்குள்ள கால சூழ்நிலைகள் மற்றும் வேகத்துக்கு கை கொடுக்க கூடிய மைதானங்களுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள தேவையான பயிற்சிகளை எடுத்து வருவதாக இதர இந்திய வீரர்களும் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளனர்.



