கலங்கிய கண்கள், சோகத்துடன் இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டியில் விளையாடிய டேவிட் மில்லர் – ரசிகர்களும் சோகம்

David Miller vs IND
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. லக்னோவில் நடைபெற்ற அப்போட்டியில் ஹென்றிச் க்ளாஸென் 74* ரன்களும் டேவிட் மில்லர் 75* ரன்களும் எடுத்ததால் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 250 ரன்கள் இலக்கை சேசிங் செய்தபோது கேப்டன் தவான் உள்ளிட்ட டாப் 4 பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டானதால் இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடியும் இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கவுகாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா நிர்ணயித்த 238 ரன்களை துரத்தும் போது அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் சதமடித்து போராடிய போதிலும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. இருப்பினும் அவரது ஆட்டம் இந்திய ரசிகர்களையே கைதட்டி பாராட்ட வைத்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்வதற்கும் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு கடுமையான சவாலை கொடுத்தார்.

- Advertisement -

பிரிந்த செல்ல ரசிகை:
அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே அற்புதமாக செயல்படக்கூடிய டேவிட் மில்லர் ராஞ்சியில் அக்டோபர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு காத்திருந்த போது மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியை சந்தித்தார். அதாவது கிரிக்கெட்டில் விளையாடும் அவரைப்போன்ற வீரர்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருப்பது வழக்கமாகும். அந்த வகையில் தங்களது நாட்டில் தன் மீது மிகுந்த பாசத்தை வைத்திருக்கும் ஒரு தீவிர சின்னக் குழந்தை ரசிகை மீது டேவிட் மில்லர் எப்போதும் பிரியத்துடன் இருந்து வருகிறார்.

ஆனால் சோகம் என்னவெனில் அந்த இளம் வயதிலேயே அந்த செல்ல குழந்தைக்கு புற்றுநோய் இருக்கிறது. அதனால் அந்த குழந்தை மீது அதிகப்படியான பாசம் வைத்துள்ள டேவிட் மில்லர் தங்களது சொந்த நாட்டில் தாம் விளையாடும் போதெல்லாம் அவரை நேரிடையாக மைதானத்திற்கு வரவழைத்து அவருடன் நெருங்கிப் பழகி முடிந்த வரை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்.

- Advertisement -

அந்த வகையில் தம்க்குப் பிடித்த ஹீரோ கிரிக்கெட் வீரர் தம்முடன் நெருங்கிப் பழகியதால் மகிழ்ச்சியுடன் இருந்தாலும் தொடர்ந்து புற்றுநோயுடன் போராடி வந்த அந்த குழந்தை அக்டோபர் 8ஆம் தேதியன்று தென் ஆப்பிரிக்காவில் இயற்கை எய்தினார். இளம் வயதிலேயே தன்னுடைய தீவிர செல்ல ரசிகை இந்த உலகை விட்டு பிரிந்த அதிர்ச்சியை தாங்க முடியாத டேவிட் மில்லர் மிகவும் மனமுடைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி புகைப்படத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “உன்னை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன் ஸ்கட். இந்த உலகிலேயே எனக்குத் தெரிந்து உன்னுடைய மனது மிகப்பெரியது. போராடி சண்டையிடுவதை நீ மற்றுமொரு தளத்திற்கு எடுத்துச் சென்று அதை நேர்மறையாக அணுகி எப்போதுமே உன்னுடைய முகத்தில் புன்னகையை காட்டினாய். எனக்கு நீ செய்யும் சேட்டைகள் குறும்புத்தனம் மிகவும் பிடிக்கும்”

“நீ ஒவ்வொரு நபர்களையும் சவால்களையும் உன்னுடைய பயணத்தில் அற்புதமாக எதிர்கொண்டாய். மேலும் எனது வாழ்வில் மகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்க நீ நிறைய தருணங்களை எனக்கு கொடுத்துள்ளாய். உனது பயணத்தில் நானும் ஒருவனாக உன்னுடன் நடந்ததற்கு பெருமைப்படுகிறேன். ஐ லவ் யூ சோ மச், ஆழ்ந்த இரங்கல்கள்” என்று கூறியுள்ளார்.

முதலில் “என்னுடைய செல்ல சின்ன அரசியே” என்று அவர் குறிப்பிட்டிருந்ததால் அது அவருடைய மகள் என்று செய்திகள் வந்தன. ஆனால் இறுதியாக தான் அந்த குழந்தை அவருடைய ரசிகை என்றும் அவர் புற்றுநோயுடன் போராடி வந்தார் என்றும் உறுதியான தகவல்கள் வந்தன. டேவிட் மில்லருடன் அழகிய சிரித்த முகத்துடன் நிற்கும் அந்த குழந்தை தற்போது உலகில் இல்லை என்பதை நினைக்கும் ரசிகர்கள் கண்கலங்கி அவருக்கு ஆறுதல் செய்தி தெரிவிக்கின்றனர். மேலும் ஷான் டைட், டீ சில்வா போன்ற நிறைய முன்னாள் இந்நாள் வீரர்களும் அந்த செல்லத்தின் பிரிவுக்காக மில்லருக்கு ஆறுதல் தெரிவிக்கின்றனர்.

Advertisement