சச்சின் உட்பட யாராக இருந்தாலும் ரிஷப் பண்ட்டை பார்க்க முடியாது – டெல்லி வாரியம் அதிரடி நடவடிக்கை

- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர இளம் கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று கார் விபத்திற்கு உள்ளாகி தீவிர சிகிச்சைகளை பெற்று வருகிறார். கடைசியாக கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த அவர் அடுத்ததாக நடைபெறும் இலங்கை தொடரில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் ஏற்கனவே சந்தித்திருந்த லேசான காயத்திலிருந்து குணமடைய ஜனவரி 3 – 15 வரை பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வார் என்று செய்திகள் வெளியானது. அந்த நிலையில் டேராடூனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் புத்தாண்டுக்காக வீடு திரும்பும் போது அதிகாலை 5.30 மணிக்கு சற்று அதிவேகமாக தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் பயணித்துள்ளார்.

அப்போது தூக்க கலக்கத்தை சந்தித்ததால் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதிய அவருடைய கார் விபத்திற்குள்ளானது. அந்த நேரத்தில் சாதுரியமாக செயல்பட்டு வெளியே வந்த அவரை அருகிலிருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீட்டு பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவருடைய கார் நெருப்பில் எரிந்து சேதமான நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் விரைவில் குணமடைய வேண்டுமென்று உலகம் முழுவதிலும் உள்ள முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்தனர். அதற்கேற்றார் போல் ஆபத்து கட்டத்திலிருந்து வெளியே வந்த அவர் எலும்பு முறிவுகளை சந்திக்கவில்லை என்ற செய்திகள் வெளியானது ரசிகர்களை நிம்மதியடைய வைத்தது.

- Advertisement -

விஐபி அனுமதியில்லை:
இருப்பினும் அதிகப்படியான மேற்புற காயங்களை சந்தித்த அவர் குணமடைவதற்கு குறைந்தது 6 மாதங்கள் தேவைப்படும் என்று செய்திகள் வெளியானது. அதனால் அடுத்ததாக வரும் பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா களமிறங்கும் முக்கியமான பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாட முடியாது என்று எதிர்பார்க்கப்படும் அவர் ஐபிஎல் தொடரிலும் 2023 உலகக்கோப்பையிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. இருப்பினும் முழுமையாக குணமடைந்தாலே போதும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் முகத்தில் சந்தித்த காயத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ள ரிசப் பண்ட் தற்போது தொடர்ந்து டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை அனுபம் கெர் போன்ற சில நட்சத்திரங்கள் நேற்று முன்தினம் நேரடியாக சந்தித்தார்கள். அந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் போன்ற விஐபி நட்சத்திரங்கள் விரைவில் அவரை நேரில் பார்த்து நலம் விசாரிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது அவர் இருக்கும் நிலையில் எந்த விஐபிக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள டெல்லி கிரிக்கெட் வாரிய இயக்குனர் சியாம் சர்மா முடிந்தளவுக்கு அனைவரும் அவரை பார்ப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட்டை பார்க்க விரும்புவர்கள் அதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அந்த சந்திப்பின் போது மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அவரை சந்திப்பதற்கு எந்த விஐபபிகளுக்கு அனுமதி கிடையாது. உண்மையாகவே அவர் மீது அக்கறை இருந்தால் யாரும் அவரை பார்க்க வர வேண்டாம். ஏனெனில் நீங்கள் பார்க்கும் போது ஏதேனும் ஒரு வகையில் அவருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது”

“தற்போதைய நிலைமையில் அவர் சீரான நிலையில் குணமடைந்து வருகிறார். அவரது உடல் நிலை பற்றிய தகவல்களை பிசிசிஐ மருத்துவ குழுவினர் தொடர்ந்து இங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்கள். குறிப்பாக செயலாளர் ஜெய் ஷா அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தற்போதைய நிலைமையில் அவர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த சமயத்தில் தன்னுடைய காரை காப்பாற்றுவதற்கு அவர் முயற்சித்ததாக என்னிடம் கூறினார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்கவீடியோ : கால் படக்கூடாது அவ்ளோ தானே, வரலாற்றின் சாதூர்ய கேட்ச் பிடித்த வீரர் – கண்ணை துடைத்து விட்டு பார்க்கும் ரசிகர்கள்

இதனால் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பும் வரை எந்த முக்கிய புள்ளிகளும் அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வாரிய நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் அவர் குணமடைந்து வரவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

Advertisement