என்னய்யா ஃபிட்னெஸ் இது, தொப்பை வெளிய தெரியுது – பாகிஸ்தான் வீரர்களை விளாசும் முன்னாள் கேப்டன்

Pak Shadab Khan
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கியுள்ள 16 அணிகளில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. சமீப காலங்களில் ஆசிய கோப்பையில் இலங்கையிடம் பைனலில் தோற்றது, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 4 – 3 (7) என்ற கணக்கில் தோற்றது போன்ற தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அந்த அணி கடந்த வாரம் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்று புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

SL vs PAK Babar Azam

- Advertisement -

அத்துடன் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் சாஹீன் அப்ரிடி காயத்திலிருந்து திரும்பியுள்ளது பெரிய பலத்தை சேர்க்கிறது. இருப்பினும் பலவீனமாக கருதப்படும் மிடில் ஆர்டர் நியூசிலாந்து முத்தரப்பு தொடரின் பைனலில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்த போதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் நடந்த பயிற்சி போட்டியில் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அத்துடன் பார்மில் இருந்தாலும் முஹமது ரிஸ்வான் – பாபர் அசாம் ஆகியோர் டாப் ஆர்டரில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவதும் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

தொப்பை தொங்குது:
இருப்பினும் குறைகளை சரி செய்து கொண்டு அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணியினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பேட்டிங், பவுலிங் என்பதைத் தாண்டி பாகிஸ்தான் வீரர்களின் ஃபிட்னெஸ் மோசமாக உள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் நிறைய முக்கிய வீரர்களின் தொப்பை வெளியே தெரிவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுவாக நவீன சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றியில் முக்கியப் பங்காற்றக்கூடிய பீல்டிங் துறையில் வீரர்கள் சிறந்து விளங்குவதற்கு துல்லியமான ஃபிட்னஸ் அவசியமாகிறது.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

அதிலும் குறிப்பாக இந்த உலகக் கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலியாவில் பெரிய மைதானங்கள் இருக்கும் என்பதால் அங்கு பவுண்டரி எல்லை அருகே நின்று கேட்ச் பிடிப்பது, பந்தை குறி பார்த்து எறிந்து ரன் அவுட் செய்வது போன்ற அம்சங்களுக்கு ஃபிட்னஸ் 100% தேவைப்படுகிறது. ஆனால் இதற்கு முன் பயிற்சியாளராக இருந்த தாமும், வாக்கார் யூனிசும் அணியிலிருந்து வெளியேறிய பின் பாகிஸ்தான் வீரர்களின் பிட்னஸ் மோசமாகி விட்டதாக தெரிவிக்கும் மிஸ்பா-உல்-ஹாக் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வக்கார் மற்றும் நான் அணியிலிருந்து வெளியேறிய பின் ஃபிட்னஸ் விஷயத்தில் பிரச்சினைகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நான், சோயப் மாலிக், யூனிஸ் கான் போன்றவர்கள் விளையாடிய போது பிட்னெசுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதர வீரர்களும் அதை பின்பற்ற கட்டாயப் படுத்தினோம். மற்றவர்களை அவர்களுடைய வரம்புக்கு வெளியே தள்ளுபவர்கள் நல்ல பயிற்சியாளர்களாக இருக்க முடியாது. இப்போதைய பாகிஸ்தான் அணியில் இருக்கும் வீரர்களிடம் தொப்பை தெரிகிறது. அவர்கள் அதிக எடையுடன் இருப்பதால் சுலபமாக நகர முடிவதில்லை”

Misbah-ul-Haq

“தற்சமயத்தில் பாகிஸ்தான் அணியில் ஃபிட்னெஸ் சம்பந்தமாக எந்த சோதனையும் நடத்தப்படுவதில்லை என்பதே அதற்கு காரணமாகும். தற்போது உடல் தகுதியை யாரும் கடை பிடிப்பதில்லை. மேலும் உள்ளூர் தொடர்களில் பிட்னஸ் சோதனை என்பது நகைச்சுவை ஆகிவிட்டது. முன்பெல்லாம் நாங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்க உள்ளூர் கிரிக்கெட்டிலேயே தரமான ஃபிட்னஸ் பயிற்சிகளை பின்பற்ற வேண்டுமென்று பேசுவோம். ஆனால் இப்போது உள்ளூர் அளவில் இருக்கும் நிர்வாகிகளும் ஃபிட்னஸ் சோதனைகளுக்கு எதிராக உள்ளனர்” என்று கூறினார்.

அதாவது இந்தியா போன்ற இதர அணிகள் தரமான பிட்னஸ் கடை பிடிப்பதற்காக யோ யோ டெஸ்ட் போன்ற வழி முறைகள் பின்பற்றும் நிலையில் பாகிஸ்தானில் அது போன்ற எந்த சோதனைகளும் வரைமுறைகளும் பின்பற்றப் படுவதில்லை என்று மிஸ்பா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட் அளவிலேயே இளம் வீரர்கள் தரமான பிட்னஸ் பின்பற்றுவதற்கான வழிமுறைகளை பாகிஸ்தான் வாரியத்தை அமைத்துக் கொடுக்கவில்லை என்று விமர்சிக்கும் அவர் அதனாலேயே சர்வதேச அளவிலும் பாகிஸ்தான் வீரர்களின் பிட்னஸ் சுமாராக உள்ளதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

Advertisement