உலகெங்கிலும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரும் பாதிப்பிற்கு மத்தியில் தற்போது 5 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் தொடர் பல்வேறு கட்டுப்பாடுகள் உடனும் நெறிமுறைகள் உடனும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதனை முழுவதுமாக இப்பதிவில் காண்போம்.
பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் மாற்றப்பட்டதை அடுத்து 8 அணிகளையும் இந்தியாவில் தனிமைப்படுத்தி அவர்களுக்கான பரிசோதனையை மேற்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பப்பட்டனர். பிறகு இங்கு வந்து ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் அதன் பிறகு பரிசோதனை என அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு ஐபிஎல் நிர்வாகம். அதனைத்தொடர்ந்து ஆளில்லா மைதானங்களில் வீரர்களுக்கான பயிற்சி ஏற்பாடு செய்து கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது தொடர் தொடங்கும் முன்னரும் நடைபெற்ற பரிசோதனை முடிந்து தற்போது 8 அணிகளும் இத் தொடரில் பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றன. வழக்கமாக ஐபிஎல் தொடர் என்றாலே ரசிகர்களின் கூட்டம் ஆரவாரம் என மைதானம் அமர்க்களமாக இருக்கும். ஆனால் இம்முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முதல் கட்டுப்பாடாக மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இன்றி முதல் முறையாக நடைபெறும் தொடராக இத்தொடர் கருதப்படுகிறது.
மேலும் ஆட்டத்தின் இடையே “சியர் லீடர்ஸ்” என்று அழைக்கப்படும் நடன அழகிகளின் நடனத்தை இம்முறை காணமுடியாது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க வீரர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது மைதானத்திற்குள் நுழையும் வரை ஒவ்வொரு வீரரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். டாஸ் போடும்போது முடிந்த பிறகும் கேப்டன்கள் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டத்தின் இடையே குளிர் பானம், தண்ணீர், துண்டு, பேட், கிளவுஸ் என எந்த வகை உபகரணங்களை எடுத்து வந்தாலும் எடுத்து வரும் வீரர்கள் கைகளில் கிருமி நாசினியால் சுத்தம் செய்த பிறகு அவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் களத்தில் உள்ள வீரர்களும் அதனை வாங்கும் முன்னர் கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பிறகு அவற்றை வாங்க வேண்டும் என்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க இந்த விதிமுறைகள் அனைத்தும் கட்டாயம் பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது.
லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்தவுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் நான்கு அணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லும். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஆரம்பிக்கவுள்ள இந்த தொடர் ரசிகர்கள் இன்றி எவ்வாறு நடைபெறப்போகிறது என்பதை நாம் இன்று காண முடியும். அபுதாபியில் நடைபெறும் இன்றைய முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு ஏழு முப்பது (7.30) மணிக்கு துவங்குவது குறிப்பிடத்தக்கது.